சென்னை : பல்லவன் பணிமனை மட்டுமில்லாமல் மேலும் 7 இடங்களை அடமானம் வைத்து வங்கிகளில் கடன் வாங்கியது தி.மு.க ஆட்சியில் தான் என்று அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியுள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடமாக இருக்கும் பல்லவன் இல்லம் ரூ.7.50/- கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது என்பது பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் பல்லவன் இல்லம் மட்டுமல்ல மேலும் 7 இடங்களை 1997 முதல் 2007 வரை அடமானம் வைத்து ரூ. 30.50 கோடி கடன் வாங்கியது தி.மு.க அரசு என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.
1) அயனாவரம் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் 26.12.1997 திமுக ரூ.2.00 கோடி கனரா வங்கி
2) மந்தைவெளி பணிமனை மற்றும் பேருந்து நிலையம் 29.10.1999 திமுக
3) பட்டுல்லாஸ் சாலை ழுணிமனை 12.03.1998 திமுக ரூ.20.00 கோடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
4) அண்ணாநகர் (மேற்கு) பணிமனை மற்றும் பேருந்து நிலையம் 28.04.1999 திமுக
5) அம்பத்தூர் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் 08.02.2007 திமுக
6) பல்லவன் இல்லம் தலைமை அலுவலகம் 07.02.1997 திமுக ரூ.2.50 கோடி இந்தியன் வங்கி
7) பேசின் பாலம் ழுணிமனை 14.05.2007 திமுக ரூ.1.00 கோடி விஜயா வங்கி
8) திருவான்மியூர் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் 16.11.2006 திமுக ரூ.5.00 கோடி யூகோ வங்கி
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் கடன் : பணிமனைகள்554.50 கோடி
பெங்களூர் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் கடன் : ரூ.594.71 கோடி
பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால் பேருந்துகளை பராமரிக்க பணிமனைகள்அவசியம். 2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சி காலத்தில் புதியதாக திறக்கப்பட்ட பணிமனைகளோ 10 மட்டும் தான். ஆனால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் புதியதாக திறக்கப்பட்ட பணிமனைகளோ 42. ஆகவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் அகில இந்திய அளவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறந்த பராமரிப்பு, டீசல் சிக்கனம், டயர் பராமரிப்பு போன்றவற்றிற்காக 53 விருதுகளை பெற்றுள்ளது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் 37 விருதுகளை பெற்றுள்ளது.
நிலுவைத் தொகை
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் சேமநல நிதி, ஓய்வூதியம், காப்பீடுகள் போன்றவற்றை போக்குவரத்துக்கழகங்களுக்காக பயன்படுத்திய காரணத்தால், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் கிடைக்காததால் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
நிலுவை தொகை விபரம்
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுக்கால பலன்களின் நிலுவைத் தொகை தி.மு.க ஆட்சியில் ரூ.922.24 கோடி. ஆனால் அ.தி.மு.க அரசு வழங்கியது. ரூ.1,231.96 கோடி. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட தொகை ரூ.928.86 கோடி. அ.தி.மு.க ஆட்சியிலோ ரூ.3,050.34 கோடி. அதிகம் ரூ. 2,121.48 கோடி. போக்குவரத்து கழகங்களுக்கு தி.மு.க ஆட்சியில் அரசு வழங்கிய தொகை ரூ.3,685.89 கோடி. அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டதோ ரூ.10,513.00 கோடி. தி.மு.க ஆட்சியை விட அதிகம் ரூ.6,827.11 கோடி
போக்குவரத்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை உள்ள அ.தி.மு.க அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக எம்.ஜி.ஆ.ரால் ஈரோட்டில் பொறியியல் கல்லூரியும்,பெருந்துறையில் மருத்துவக் கல்லூரியும் துவக்கப்பட்டு இது நாள் வரை போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளில் 3801பேர் பொறியியல் பட்டமும் 479 பேர் மருத்துவ பட்டமும் பெற்றுள்ளனர். மேலும் மருத்துவக்கல்லுரியில் சேர்க்கை 60 லிருந்து 100ஆக உயர்த்தப்படதனால் தொழிலாளர்களின் குழந்தைகள் 21 லிருந்து 30 பேர் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆட்சியில் திருநெல்வேலி, பர்கூர், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு இதுவரை போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளில் 3388 பேர் பட்டயம்பெற்றுள்ளனர்.
மூத்த குடிமக்கள் இலவச பயணம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான. செப்டம்பர் 15ம் தேதி அன்று அம்மா குடிநீர்திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. அதன்படி பாதுகாக்கப்பட்ட அம்மா குடிநீர் ஒரு லிட்டர் பாட்டிலின் விலை வெறும் பத்து ரூபாய்.
வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூபாய் இருபது, மத்திய அரசின் ரயில்வே துறை வழங்கும் ஒரு லிட்டர் குடிநீர்பாட்டிலின் விலை ரூபாய் பதினைந்து. சராசரியாக நாளொன்றிற்கு 1.35 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி 23.10.2013 அன்று சிறிய பேருந்து சேவை சென்னைமாநகரத்தில் தொடங்கப்பட்டு தற்போது 200 சிற்றுந்துகள் இயங்கி வருகிறது. மூத்த குடிமக்கள் விலையில்லாப் பேருந்து பயண அட்டை திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் முதல் மூத்த குடிமக்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்து கழகப்பேருந்துகளில், இலவச பயண வசதி திட்டத்தை துவக்கி வைத்து இதுவரையில் 2 கோடியே 92 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயணமசெய்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 46 ஆயிரத்து 500 மூத்த குடிமக்கள் பயணம் செய்துவருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மிகப்பெரிய துறையாகும். இதில் பயணம் செய்யும் பயணிகள்எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 2 கோடி. இது ஒட்டுமொத்த இந்தியாவிலேயே ரயில்வேயில் ஒரு நாள் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு நிகராக உள்ளது.எந்த அரசாக இருந்தாலும் போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்காக வங்கிகள் மற்றும் போக்குவரத்துவளர்ச்சி நிதி நிறுவனத்தில் கடன் பெறுவது என்பது இயல்பு, அதனால்தான் போக்குவரத்து துறை இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.