அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவப் படிப்புக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் பள்ளி-கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்; மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்றும் (புதன்கிழமை) தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கையில் பதாகைகளுடன் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன் நீட்சியாக இன்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அனைவரும் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் போராட்டம் நடைபெறுவதால் அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அண்ணா பல்கலை.யில் போராட்டம்
திண்டுக்கல்லில் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் காலை 10 மணியில் இருந்து பல்கலைக்கழக வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்களிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
தலைமை என்று யாரும் இல்லாமல், ஒருங்கிணைப்பு எதுவும் இல்லாமல் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களுக்கு நிகராக 500-க்கும் மேற்பட்ட மாணவிகளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் கோரிக்கைகளுக்குமுடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல வணிகர்கள் சங்கத்தினர் திருப்பூர் காந்தி சிலையின் முன் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
திருவாரூர், திருநெய்ப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும், நீட்டில் இருந்து விலக்கு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடினர்.
திருநெல்வேலி, வண்ணாரப் பேட்டையில் எஃப்எக்ஸ் (ஃப்ரான்சிஸ் சேவியர்) பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அனிதாவின் மரணத்துக்குக் காரணமான மாநில, மத்திய அரசுகளைக் கண்டித்துப் போராட்டம் என்று தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.