பாலியல் குற்றங்களுக்கு செல்போன்தான் காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காதலிக்க மறுத்த மாணவி தீ வைத்து எரிப்பு, விழுப்புரத்தில் 14 வயது பெண் பாலியலுக்கு ஆளானது, செல்போன்களில் ஆபாசம் படம் பார்த்துதான் இது போன்ற வன்கொடுமை செயலில் நடந்து கொண்டதாக குற்றவாளி ஒருவன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதெல்லாம் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்துவதாக உள்ளதாக வைகோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். பெருமை என்று நினைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித்தருவது மற்றும் அதற்கு இணையதள வசதி செய்துகொடுப்பது போன்ற காரியங்களை பெற்றோர் யாரும் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள வைகோ, வளர்ந்த நாடுகளில் கூட சிறுவர்கள் செல்போனில் இணையதளம் பயன்படுத்த அனுமதியில்லை.
பரந்து விரிந்த உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. உலகத்தில் நன்மையும் தீமையும் போட்டிபோட்டு வளர்ந்தாலும், தீமைகளுக்கு ஆதரவுக்கரங்கள் சற்று அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. இல்லாவிட்டால் உலகத்தை உடனடியாக இணைக்கிற இண்டர்நெட்டில் அளவுக்கதிகமான ஆபாசதளங்கள் அலைபாய்ந்துகொண்டிருக்குமா? இந்திய திருநாட்டின் நல் மனங்களை கெடுக்கும்விதமாக, இளைய சமுதாயத்தை சூறையாடும்படியாக ஆபாசபடங்கள் இன்றைக்கு தடையேதுமில்லாமல் பார்வைக்கு கிடைத்துகொண்டிருக்கின்றன. படுக்கையறை நிகழ்வுகளை ஒருவர் படம் பிடித்து காட்டவோ, செய்முறை விளக்கம் செய்தோ, பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத சங்கதிகள். இதனை பால் வித்தியாசம் இல்லாமல் இயற்கையே கற்றுக்கொடுத்துவிடும். சுய உணர்வுகளை மீறிய பாடங்கள் புதிதாக ஏதும் கற்றுக்கொடுத்துவிட போவதில்லை.
நூற்றுக்கணக்கான நன்மைகளை செய்யும் இந்த செல்போன் நமக்கு தெரியாமலேயே ஆயிரக்கணக்கான தீமைகளையும் செய்கின்றன. இன்று இளம் பெண்களை படம் எடுத்து மிரட்டுவது, ஆபாச படங்களை அனுப்பி அவர்களது வாழ்வை நாசப்படுத்துவது, குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டுவது போன்ற குற்றங்கள் எல்லாம் இன்று நிறைந்து பெருகி வழிவது செல்போனால்தான். ஆனால் அதே செல்போன்தான் அத்தகைய குற்றவாளிகளையும் அடையாளம் காட்டி கொடுத்து செல்கிறது என்பது வேறு விஷயம். ஏராளமான பெண்கள் கற்பழிப்பு, பாலியல் வன்மத்துக்கு காரணம் பெண்களின் ஆபாச ஆடைகள்தான் என பொதுவாக கூறப்படுகிறது. இது மறுக்கமுடியாத ஆனால் ஓரளவு உண்மைதான்.
3 வயது குழந்தை கற்பழிக்கப்படுகிறாள் என்றால் அவள் என்ன ஆபாச ஆடையா அணிந்திருந்தாள்? வக்கிரம் தலைக்கேறிவிட்டால் குழந்தை என்ன கிழவி என்ன? எல்லாவற்றுக்கும் காரணம் செல்போனே. ஏன் ஒடிசா, குஜராத் போன்ற மாநில சட்டசபைகளுக்குள் கேள்வி நேரத்தின்போது எம்.எல்.ஏக்களே ஆபாச படங்களை பார்த்து நாறிபோன கதைதான் நாடறியுமே? இத்தகைய போக்கு தொடருமானால் கலாச்சாரமும் பாரம்பரியமும் பழமையும் நிறைந்த நம் தேசத்தில் இளையவர்களின் நிலை என்னவாகும் என்று யோசிக்க கூட முடியவில்லை. விஞ்ஞான அறிவியில் நுட்பத்தை பாழ்படுத்த முனைந்து செயல்படுகிறவர்களை களையெடுக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும். யாராவது ஒருவர் புகார் தந்தால்தான் நடவடிக்கை தொடங்கும் என்கிற நிலை இனி வேண்டாம். செல்போனை பயன்படுத்துவோர் மனது வைத்தாலே இந்த ஆபாசங்களை தடுத்துவிட முடியும்.
பாலில் ஆடையை வடிகட்டுவதுபோல் இண்டர்நெட்டில் வரும்விஷயங்களை வடித்துவிட முடியும். எனினும் அரசாங்கத்தின் மேற்பார்வையில் இன்னென்ன தளங்களை தடை செய்கிறோம் என்று அறிவித்து, அரசு அனுமதிக்கிற தளங்களை மட்டும் நுகர செய்ய முடியும். இணையதளங்களில் ஆபாச படங்களை பார்க்கும் நபர்களுக்கு பாலியல் குற்றவாளிகளுக்குரிய தண்டனையை தயங்காமல் வழங்க வேண்டும். ஆரம்பம் முதலே ஒரு மையம் இப்படித்தான் அமைக்கப்பட வேண்டும் என்ற வரைமுறை இருந்திருந்தால் இந்தளவுக்கு ஆபாச தளங்கள் இளைஞர்களை ஆக்கிரமித்திருக்க முடியாது. இதற்கென உள்ள சில மென்பொருளை பயன்படுத்தி ஆபாச தளங்களுக்கு அரசு இனியாவது தடை போடலாமே? அளவுக்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல… செல்போனும் நஞ்சுதான்.