ஆர்.கே.நகர் தொகுதியில் மேலும் 12 வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் எச்.எம்.ஜெயராம் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று பார்வையிட்ட பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதல் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் மொத்தம் 11 இடங்களில் மாநகர காவல்துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இப்பணிகளை காவல் இணை ஆணையர் ர.சுதாகர், துணை ஆணையர் கோ.சசாங் சாய் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 7 காவல் நிலையங்கள் வருகின்றன. இப்பகுதியில் ஏற்கெனவே 12 ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொகுதிக்கு வெளியில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து மேலும் 12 ரோந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு, ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் இயங்கும். ஒவ்வொரு ரோந்து வாகனமும் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் இயங்கும்.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குற்றப் பின்னணி உடையவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். யாரேனும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள வாகனங்களுக்கு பாஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை, அனைத்து வாக்குச்சாவடிகளையுமே பதற்றமான சாவடிகளாகத்தான் பார்க்கிறோம். தேர்தல் நேர்மையாக நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.