இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு ஜி.எஸ்.டி. வகை செய்கிறது.
இதனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் நகைக் கடைக்காரர்கள், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி உள்பட பல்வேறு மக்களின் நுகர் பொருள் விற்பனையாளர்கள் ஜி.எஸ்.டி.க்குப்பின் விலை உயரும் என்று கூறி தங்களிடம் இருப்பில் உள்ள பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
சினிமா, கார் போன்ற ஆடம்பரங்களுக்கு மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதுவரை வரி விதிப்புக்கு உள்ளாகாமல் இருந்த பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் எந்த பொருளின் விலை உயரும், எது கட்டுக்குள் இருக்கும் என்ற குழப்பம் மக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
சில தொழில் நிறுவனங்களுக்கு மாநிலங்கள் பல்வேறு வரி விலக்கு சலுகைகள் அளித்து தங்கள் மாநிலத்தில் தொழில் வளத்தை பெருக்கி விடுகிறது. இனி அவ்வாறு செய்ய முடியாது, வரி விலக்கை பார்த்து தொழில் தொடங்காமல் தங்கள் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் நிறுவனங்களை தொடங்க முடியும், இதன் மூலம் நிறுவனங்கள் இடையே ஆரோக்கிய போட்டி இருக்கும் என்று தொழில் முனைவோர் தெரிவிக்கிறார்கள்.
நாட்டில் 30 ஆண்டு காலமாக பல்வேறு வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடைசியாக தற்போது ஜி.எஸ்.டி. வரியாக அறிமுகமாகிறது.
1986-87-ல்:- வி.பி.சிங் நிதி மந்திரியாக இருந்தபோது முதல் முறையாக ‘மோட் வாட்’ வரியை அறிமுகப்படுத்தினார். இதுதான் பின்னாளில் வாட் வரியாகியது. ஜி.எஸ்.டி.யின் முதல்படி என்றும் சொல்லலாம்.
அடுத்து 1991-96-ல்:- மன்மோகன்சிங் நிதி மந்திரியாக இருந்தபோது சேவை வரி என்ற புதிய வரி விதிப்பை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் 2005-06-ல்:- ப.சிதம்பரம் நிதி மந்திரியானதும் வாட் வரியை கொண்டு வந்தார். பெரும்பாலான மாநிலங்களில் இது அமல்படுத்தப்பட்டது. 2010-ல் இருந்து ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தலாம் என்ற யோசனையும் அப்போது ப.சிதம்பரம் தெரிவித்தார்.
வாட் என்பது மதிப்பு கூட்டு வரியாகும். ஒரு பொருள் உற்பத்தியான பிறகு அதற்கு வரி மேல் வரி விதிப்பதை தவிர்த்து ஒரு பொருளின் ஒவ்வொரு கட்டத்திலான கூட்டப்பட்ட மதிப்புக்கு ஏற்ப வாட் வரி விதிக்கப்பட்டது.
2008-ல்:- ஜி.எஸ்.டி. வரி தொடர்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
2010-ல்:- பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்தபோது ஜி.எஸ்.டி.யை முழு வீச்சில் அமல்படுத்த திட்டமிட்டார். ஆனால் அப்போது பிரதமர் மோடி முதல்-மந்திரியாக இருந்த குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கிடப்பில் போட வைத்து விட்டன.
2011-ல்:- மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ஜி.எஸ்.டி. அமல்படுத்த விடாமல் பா.ஜனதா முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டினார். அப்போது பிரணாப் முகர்ஜி ஜி.எஸ்.டி. அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு அளிக்கும் மசோதாவை கொண்டு வந்தார்.
2012-13-ல்:- காங்கிரஸ் கூட்டணி அரசு ஜி.எஸ்.டி.க்கு முழு வடிவம் கொடுத்தது. இதில் பெட்ரோலிய பொருட்களையும் சேர்க்க முடிவு செய்தபோது மாநில நிதி மந்திரிகள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
2014-ல்:- அருண்ஜெட்லி நிதி மந்திரியானதும் ஜி.எஸ்.டி.யில் பல்வேறு மாற்றங்கள் செய்து அதற்கான அரசியல் சட்ட பாதுகாப்பு மசோதாவையும் மாற்றி அமைத்தார்.
2015-ல்:- பாராளுமன்றத்தில் பா.ஜனதாவின் பெரும்பான்மையால் ஜி.எஸ்.டி. நிறைவேறியது. ஆனால் மேல்-சபையில் காங்கிரஸ் பல்வேறு திருத்தங்கள் செய்யக்கோரி ஜி.எஸ்.டி.யை நிறைவேறாமல் தடுத்து விட்டது.
2016-17-ல்:- ஜி.எஸ்.டி.யில் புதிய திருத்தங்கள் செய்து அதற்கு மத்திய அரசு ஆதரவு திரட்டியது. பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைகள் இறுதி செய்யப்பட்டது.
2017 ஜூலை 1-ந்தேதி:- ஜி.எஸ்.டி. முழு வீச்சில் அமலுக்கு வருகிறது.