வழக்கமாக தனது பெயருக்கு முன்னால் இருக்கும் ‘இளைய தளபதி’ பட்டத்தை ‘தளபதி’ என மாற்றியுள்ளார் விஜய்.
இதுவரை பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த விஜய் – அட்லீ படத்துக்கு ‘மெர்சல்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
இப்போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக ‘தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவரை விஜய்க்கு முன்பாக ‘இளைய தளபதி’ என்ற பட்டத்தை பயன்படுத்தி வந்தார். ‘மெர்சல்’ படத்திலிருந்து வெறும் ‘தளபதி’ என்று சுருக்கியுள்ளார்.
‘மெர்சல்’ படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் படத்தை பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை, ராஜஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.