விவசாயிகளுக்கு சேவையாற்றும் நோக்கத்துடன் உரத்துறைக்கு ஊக்கமளிக்க மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருவதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். வேளாண் உற்பத்தியை தக்கவைப்பதற்காக உரச்சத்துக்களை சரியாகப் பயன்படுத்துவது மற்றும் உரப்பயன்பாட்டுத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கத்துடன், மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையும், மத்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையும் இணைந்து, உரமிடுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை விவசாயிகளுக்காக நடத்தி வருகின்றன என்று திரு கவுடா தெரிவித்தார்.
உரம் மற்றும் உரத்தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிப்பதற்காக, மத்திய உரத்துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து, “உரங்கள் மற்றும் உரத்தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில்” எனப்படும் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு சொசைட்டிகள் பதிவுச் சட்டம் 1860-ன் கீழ் சொசைட்டியாக, 2019 ஆகஸ்ட் 19-ல் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கவுன்சில், உரம் மற்றும் உர உற்பத்தி தொழில்நுட்பம், கச்சாப் பொருட்கள் பயன்பாடு, புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு ஆகியவை தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதுவரை, இதன் பொதுக்குழுமம், இரண்டு கூட்டங்களையும், செயற்குழு மூன்று கூட்டங்களையும் நடத்தியுள்ளது.