உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பாக செயலாற்றிய 20 மாவட்டங்களுக்குத் தூய்மை விருதுகளை மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் இன்று வழங்கினார்கள்.
மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் செயல்படும் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்திருந்த விழாவில் காணொலி வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் தூய்மை இந்தியா (ஊரக) இயக்கம் ஐந்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் தூய்மை இந்தியா (ஊரக) இயக்கத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், இதன்படி திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அது நீடிப்பதற்கும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
கிராமப்புறங்களில் விரிவான சுகாதார வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் மருத்துவம் சார்ந்த பாதுகாப்பான சுகாதார வசதிகள் கிடைப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா, தூய்மை இந்தியா (ஊரக) இயக்கத்தின் இரண்டாவது கட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த அனைவரும் தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
-PIB