இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் மாத மத்தியில் எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு இந்திய பிரதமர் நரேந்திர மோதி லடாக் ஒன்றிய பிரதேசத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று, வெள்ளிக்கிழமை, காலை அவர் லடாக்கில் உள்ள லே பகுதியை சென்றடைந்ததாக அகில இந்திய வானொலி செய்தி வெளியிட்டது.
லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார்.
பலகீனமாக உள்ளவர்களால் அமைதிக்கான முயற்சியை ஒருபோதும் தொடங்க முடியாது. உலகப் போரோ அல்லது அமைதியோ, எப்போதெல்லாம் தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் நமது வீரர்களின் வெற்றியையும் அமைதியை நோக்கிய நமது முயற்சியையும் இந்த உலகம் கண்டுள்ளது. நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பணியாற்றியுள்ளோம்.
கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த ராணுவத்தினருக்காக மீண்டும் நான் மரியாதை செலுத்துகிறேன். சுயசார்பு இந்தியாவுக்கான முயற்சி உங்களின் தியாகத்தால் வலுவடைகிறது.
ராணுவத்தினர் சமீபத்தில் வெளிப்படுத்திய வீரம், இந்த உலகித்திற்கான இந்தியாவின் வலிமை குறித்த செய்தியாக இருந்தது.`
நீங்கள் பணி செய்யும் இடத்தின் உயரத்தைக் காட்டிலும் உங்களின் தைரியம் உயர்ந்து நிற்கிறது. உங்கள் தைரியம் மற்றும் வீரம் குறித்துதான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. பாரத மாதாவின் எதிரிகள் உங்களின் தீர்க்கத்தை பார்த்துவிட்டனர்.
ஆக்கிரமிப்புகளுக்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான காலம். ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் சக்திகள் தோற்று போவதையோ அல்லது திருப்பி அனுப்பப்படுவதையோ வரலாறு கண்டுள்ளது.
எல்லைப் புறத்தில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதி மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்ட பின்பு லடாக் பகுதியில் பதற்ற நிலையில் நீடிக்கிறது.
இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழலை அறிவதற்கும் அங்கு காவல் பணியில் இருக்கும் பாதுகாப்பு படையினரை உற்சாகப்படுத்துவதற்காகவும் நரேந்திர மோதி அங்கு பயணம் செய்துள்ளதாக கருதப்படுகிறது.