வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, பந்தாரப்பள்ளி பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மக்கள் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் தங்கள் குடும்பம் வாழ்வதற்க்கு போதிய இடவசதி இல்லை எனக்கூறி அரசிடம் மனு கொடுத்தனர். இதன்படி 1976ம் ஆண்டு பாலு என்பவரிடம் இருந்து ஆதிதிராவிடர் நலத்துறை நிலம் வாங்கி இப்பகுதி மக்களுக்கு 75 வீட்டு மனை பட்டாக்களை ஒதுக்கி தந்துள்ளது.
இதில் 62 வீட்டு மனை பட்டாக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லை. மீதம் உள்ள 13 வீட்டு மனைகள் ஒரு வீட்டு மனைக்கு 2 பேர் வீதம் 26 பேர் உரிமையாளர்களாக உள்ளனர். முதல் 13 பேருக்கு ஜனவரி 2019 வருடமும் பின்பு இதே 13 வீட்டு மனைகளை அதே கிராமத்தை சேர்ந்த் 13 பேருக்கு வீட்டு மனைகளை பட்டா கொடுத்துள்ளார் தனி வட்டாட்சியர் திருப்பத்தூர் குமரேசன். இந்த தவறை உணர்ந்த இப்பகுதி மக்கள் தனி வட்டாட்சியர் திருப்பத்தூர் குமரேசனிடம் சென்று நடந்த தவறை முறையிட்டனர். இதற்க்கு குமரேசன் அவர்கள் 2 மாதத்தில் சரி செய்து தருகிறேன் என்று கூறி அனுப்பிவிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் 4 மாதங்களாக காத்திருந்தனர். இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலூர் ஆட்சியர் அலுவழகத்திற்கு சென்று மக்கள் மனு கொடுத்தனர். மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை தலைமை அலுவலகம் சென்னை சென்றும் தங்களுடைய நிலத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தரும்படி கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக மனு அளித்துள்ளனர். இருந்தும் எந்த பலனும் இல்லை. இதனால் கொதித்தெழுந்த மக்கள், மண்எண்ணை கேனுடன் 01-10-2019 அன்று நாட்றம்பள்ளி – திருப்பத்தூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் போராட்டதில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டக்களத்தில் நமது நிருபர் விசாரிக்கையில் இந்த வீட்டு மனைகளை வாங்கித்தருவதில் ஏலகிரி கிராமத்தை சேர்ந்த H.கோபிநாதன் மற்றும் மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் VAO P.பெரியசாமி ஆகிய இரண்டு நபர்களும் இடைத்தரகர்களாக செயல்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அடிப்படை வசிதிகளை பெறுவதில் கூட நம் நாட்டில் சாமானிய மக்களால் முடியவில்லையே என போராட்டக்களத்தில் புலம்பித் தீர்த்தனர்.
-S. மோகன், வேலூர்