காவிரி வராதா? கரண்டும் வராது… நெய்வேலி என்.எல்.சி.யை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு முழக்கம்!

0
1355

நெய்வேலி: காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரத்தை அனுப்பக் கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி வராது எனில் கரண்டும் வராது என்பது உள்ளிட்ட முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் இதுவரை அதை செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தமிழகமே பற்றி எரியும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். எனினும் அதையும் மீறி இன்று ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறுகின்றன. இந்நிலையில் காவிரி நீரைத் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்து மின்சாரத்தை அனுப்பக் கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தை முற்றுகையிட போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதையடுத்து என்எல்சி அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் வீடுகளுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காலை முதலே நெய்வேலி என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் நெய்வேலி நோக்கி வருவோரை பாதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தும் வருகின்றனர். இதனால் நெய்வேலியில் சுற்றி பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here