சமீபகாலமாக அதிக அளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் பத்திரிகையாளர்கள்

0
1363

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் பத்திரிகைகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்பட்டன. அரசிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பத்திரிகைகள் பல தடை செய்யப்பட்டன. அதன் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சுதந்திர இந்தியாவிலும் அத்தகைய நடவடிக்கைகள் தொடர்வது ஜனநாயகத்திற்கு பேராபத்து. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என புகழப்படும் பத்திரிகைத்துறை மீது சமீபகாலமாக அதிக அளவிற்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகளை கருத்துகளாக எதிர்கொள்ள வேண்டிய அரசு நிர்வாகம், வெறுப்புணர்வு அரசியலை வெளிப்படுத்துவது தான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பெண்களை மிக இழிவான சொற்களைக் கொண்டு பதிவிடும் தனிநபர் மீது அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதன் பின்னணியில் இருப்பது என்ன என்ற கேள்வியை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. இத்துறையில் பணியாற்றுவதற்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இத்தகைய கருத்துகள் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் உருவாக்கியிருக்கும்.

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பேச்சுரிமையையும், தான் விரும்பும் கருத்தை தெரிவிக்கும் உரிமையையும் அடிப்படை உரிமைகளாக இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அதில் நியாயமான குறுக்கீடுகள் என்ற கட்டுப்பாட்டின் மூலம் மக்களின் கருத்துக்களை அரசு பறித்து வருகிறது.மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிராக கருத்தியல் ரீதியாக இயங்கிய பல பத்திரிகையாளர்கள், முற்போக்காளர்கள் சமீப காலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ், சாந்தனு பவுனிக் உள்ளிட்டோர் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிராகவும், மூடநம்பிக்கை மற்றும் பிரிவினைவாத கருத்துகளுக்கு எதிராக பேசியதாலும், எழுதியதாலும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தான், இந்தியாவில் மத்திய அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான ஆய்வறிக்கையை அந்நாட்டு வெளியுறவுத்துறை சமீபத்தில் தாக்கல் செய்தது.அதில், 2014, ஜனவரி முதல் 2017, ஏப்ரல் வரை இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், 45 பேர் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.அரசை விமர்சித்த 3 செய்தி தொலைக்காட்சிகளும், 45 வலைதளங்களும் முடக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் கொள்கைகளை விமர்சிப்போர் மீது அவமதிப்பு வழக்குகள், செய்தி நிறுவனங்களில் சிபிஐ சோதனை, பல பத்திரிகையாளர்கள் கைது என்ற நெருக்கடி பத்திரிகைத்துறைக்கு ஏற்பட்டுள்ளது, என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதே போன்று நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை இழிவாக பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். தமிழக ஆளுநர், பெண் பத்திரிகை நிருபரின் கன்னத்தைத் தட்டிய விவகாரம் தொடர்பாக, ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார், அந்தக் கருத்தை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். பதிவிட்டவரைவிட, எஸ்.வி.சேகரின் பகிர்வுக்குப் பிறகு, அந்தக் கருத்து ஊடகத்தினரிடமும், பெண்கள் அமைப்பினர், பெண் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் எதிர்ப்பை அடுத்து, எஸ்.வி.சேகர் அந்தக் கருத்தை தனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, தான் வேறு ஒருவரின் கருத்தைப் படிக்காமல் தவறுதலாகப் பகிர்ந்ததாகவும், இதனால் மனவருத்தம் அடைந்துள்ள அனைத்துப் பெண் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாகக் கடிதம் ஒன்றை வெளியிட்டார். இருப்பினும், அவரின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், ஆளுநர்மீது புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர், எஸ்.வி.சேகரின் கருத்துக்குக் கண்டம் தெரிவித்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் கடிதத்தில், “பெண் பத்திரிகையாளரான என்னையும், என்னைப் போன்ற சக பத்திரிகையாளர்களையும் தவறாக சித்திரித்து, அவமானப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, பெண்களைக் கேவலப்படுத்தி முகநூலில் கருத்துப் பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here