கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ஒரு முக்கிய தடுப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு முன்னதாக ஆரோக்கிய சேது என்ற செயலியைத் தொடங்கியது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது. கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் குறித்து மக்கள் தாங்களாகவே தெரிந்து கொள்ள இது உதவுகிறது. நவீன புளூடூத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைப் பயன்படுத்தி, மக்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுவதன் அடிப்படையில் இது மதிப்பிடப்படுகிறது. இந்தக் கைபேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மக்களும் வலியுறுத்தப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்களைக் கடந்து செல்லும் போது அதனைத் தெரிவிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கைபேசியில் பொருத்திய பின்னர், அதைப் பயன்படுத்துபவர் பல்வேறு கேள்விகளுக்கு விடை கூற வேண்டும். கூறும் சில விடைகள் கொவிட்-19 அறிகுறிகள் உள்ளதைத் தெரிவித்தால், அந்தத் தகவல் அரசின் சர்வர் எனப்படும் சேவையகத்துக்கு அனுப்பப்படும். இந்தத் தகவல், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள அரசுக்கு உதவும். மேலும் கொவிட் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் அருகில் வந்தால் செயலி உஷார்படுத்தும். இந்தச் செயலி, கூகுள் பிளே ( ஆன்ட்ராய்டு போன்களுக்கு) ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ( ஐ போன்களுக்கு) ஆகியவற்றில் கிடைக்கும். 10 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் இது கிடைக்கிறது.
சாதாரண கைபேசிகள், சாதாரண தொலைபேசிகள் வைத்திருப்பவர்களையும் ஆரோக்கிய சேது திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக “ஆரோக்கிய சேது ஊடாடு குரல் பதில் முறை -ஐவிஆர்எஸ்’’ செயல்படுத்தப்படுகிறது. இந்தச் சேவை நாடு முழுவதும் கிடைக்கிறது. கட்டணம் இல்லாத இந்தச் சேவையில், மக்கள் 1921 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்களை தொலைபேசியில் அழைத்து, அவர்களது ஆரோக்கியம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்படும்.
கேட்கப்படும் கேள்விகள் ஆரோக்கிய சேது செயலியுடன் சேரக்கப்படும். மக்கள் கூறும் பதில்களின் அடிப்படையில், அவர்களது ஆரோக்கிய நிலைமை குறித்து குறுந்தகவல் அனுப்பப்படும். மேலும் அவர்களது நடமாட்டத்தைப் பொறுத்து, அவர்களது ஆரோக்கியம் பற்றி எச்சரிக்கை தகவல்கள் வரும்.
கைபேசி சேவையைப் போன்று, இந்தச் சேவை 11 பிராந்திய மொழிகளில் செயல்படுத்தப்படுகிறது. குடிமக்கள் அளிக்கும் தகவல்கள் ஆரோக்கிய சேது தரவு தளத்தில் சேர்க்கப்படும். குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தகவல்கள் முறைப்படுத்தப்பட்டு, எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்படும்.