பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பேஸ்புக்கில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தாலுகா அலுவலக சுற்றுச்சுவரில் 25 ஆண்டு கால பழமையான பெரியாரின் 3 அடி உயரம் கொண்ட மார்பளவு சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பு வலுத்ததையடுத்து எச்.ராஜா தனது கருத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். இன்று வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். எச்.ராஜாவின் கருத்திற்கு பா.ஜ.க. மேலிடமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வன்முறைக்கு வழிவகுக்கும் வகையில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். உடனடியாக அவர் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது சிலைகள் அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து சிலைகள் உடைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.