டி.டி.எச். முறையில் சினிமா படங்கள் ஒளிபரப்பப்படுமா? நடிகர் விஷால் ஆலோசனை

0
1327

தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் சமீபத்தில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் இழப்பை சந்தித்துள்ளன. அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிம்பு, கவுதம் கார்த்திக், ஜெயம் ரவி, ஆதி ஆகியோரின் படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. இதனால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தியேட்டர்களை மூடினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகருமான விஷால் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க தியேட்டர் அதிபர்கள் மறுத்து தியேட்டர்களை மூடிவிட்டனர்.

இதனால் வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்துள்ள பல தயாரிப்பாளர்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகி வருகிறது. இதுவரை நடந்த பல போராட்டங்களின்போது தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தியேட்டர் அதிபர்கள் என சினிமா துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக தியேட்டர் அதிபர்களின் போராட்டத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு அளிக்கவில்லை. அதேபோல் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் கோரிக்கையையும் தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை.

தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால் சமீபத்தில் வெளியான படங்களையும், திரைக்கு வர தயாராக இருக்கும் படங்களையும் டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நடிகர் கமலஹாசன் 4 வருடங்களுக்கு முன்பு ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார். படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

கமலஹாசனின் முயற்சிக்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பினால் படத்தை தியேட்டர்களில் வெளியிடமாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்தனர். இதனால் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பும் முடிவை கைவிட்டார்.

இந்த நிலையில் தற்போது தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கவும், தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்கவும் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பலாமா? என்று ஆலோசித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் கூறியதாவது:- முதல்-அமைச்சரையும், அமைச்சர்களையும் சந்தித்து சினிமா டிக்கெட்டுக்கு தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கேளிக்கை வரியை அரசு ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களை டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்புவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதுபோன்ற வரி விதிப்பு சுமைகள் நீடித்தால் தயாரிப்பாளர்களின் நலன் கருதி அடுத்த கட்டமாக அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து முடிவு எடுப்போம். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையில் சினிமா படங்களை டி.டி.எச். மூலம் ஒளிபரப்புவதை தவிர வேறு வழியில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் லாபம் வரும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த திட்டத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் என அவர் கூறினார்.

டி.டி.எச். மூலம் படம் பார்ப்பது எப்படி?

தமிழில் இதுவரை சினிமா படங்கள் டி.டி.எச். மூலம் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால் இந்திப் படங்கள் தியேட்டரில் வெளியானதும் ஒரு வாரத்திலேயே டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. டி.டி.எச். நிறுவனங்கள் டெலிவி‌ஷனில் அதற்காக தனி சேனல் எண்களை ஒதுக்கியுள்ளன. அந்த சேனல் எண்களில் என்ன படம் எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகும், அதற்கு எவ்வளவு கட்டணம் என்ற அறிவிப்பு வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்த கட்டணத்தை ரீசார்ஜ் செய்தாலோ அல்லது அதில் உள்ள அறிவிப்புபடி ரிமோட் கண்ட்ரோலில் பட்டனை அழுத்தினாலோ புதுப்படங்களை டெலிவி‌ஷனில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here