தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேருந்து கட்டணத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தி தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகள், தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஒன்றிணைந்தால் அரசாங்கமே ஆட்டம் கண்டு விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், கண்டன கோஷம் என பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தஞ்சை கல்லூரி பெண்கள் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தஞ்சை, திருவாரூர், அரியலூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகள் பேருந்துகளையே பெரும்பாலும் உபயோகிப்பதால், அரசின் இந்த கட்டண உயர்வு பெரும் பொருளாதார சுமையை அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இலவச பஸ் பாஸ் வழங்கவும் அரசு தாமதித்து வருவதால் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக மாணவிகள் கண்ணீர் சிந்தினர். இலவச பஸ் பாஸில் பயணம் மேற்கொள்ளும் தங்களை நடத்துனர்களும், ஓட்டுனர்களும் கேவலமாக நடத்துவதாக புகார் தெரிவித்த பெண்கள், பேருந்து நிறுத்தத்தில் எந்த பேருந்துகள் சரியாக நிற்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ சங்க பிரதிநிதிகளை பொய் வழக்கில் போலீசார் கைது செய்து விட்டதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், பேருந்து கட்டணத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை தங்களின் போராட்டம் ஓயாது என்று கூறிய மாணவிகள், தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஒன்றிணைந்தால் அரசு ஆட்டம் கண்டுவிடும் என்றும் மாணவிகள் எச்சரிக்கை விடுத்தனர்.