திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரியாலம் கிராமத்தில், திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிக்கிறோம்” எனும் தலைப்பில் சிறப்பு மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்கள் பேசியதாவது;
திமுக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தவுடன் நாங்கள் செய்யக்கூடிய முக்கியமான வேலைகளில் ஒன்றாக, மல்லகுண்டா பகுதியில் சிப்காட் அமைக்கும் பணியும் ஒன்றாக இருக்கு.ம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படித்த ஏராளமான மாணவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் வேலைபெறும் சந்தர்ப்பம் இதன்மூலம் ஏற்படும் என்றும் தளபதி ஸ்டாலின் அவர்களிடம் அனுமதி பெற்று இப்பணியை செய்து முடிப்பேன் எனவும் உறுதியாக தெரிவித்தார்.
மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக அமைச்சராக விளங்கும் இத்தொகுதி உறுப்பினர், இப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை சரிசெய்வதில் கவனம் கொள்ளவில்லை. அதற்காக இதுவரை ஒரு சிறு கால்வாய் கூட வெட்டப்படவில்லை என்றும் வினவினார். மேலும் ரேசன் கடைகளில் தாய்மார்களின் நலனைக் கருத்தில்கொண்டு திறன் அட்டைகளுக்கு பதில் மீண்டும் புத்தக வடிவிலான குடும்ப அட்டைகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
முன்னதாக கூட்டத்திற்கு வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கவிதா தண்டபானி மாவட்ட மகளிரணி தலைவர் மற்றும் திரியாலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கூட்டத்தில் இரண்டு முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை திரியாலம் பகுதி மக்களுக்கு ஒகேனக்கள் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும். மற்றும் திரியாலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த வேண்டும் என்பதாகும்.
-S.Mohan