திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 24 ஆண்டுகளாக பிரதான அர்ச்சகர்களில் ஒருவராக பணியாற்றிய ரமண தீட்சிதரை, வயது வரம்பை காரணம் காட்டி சமீபத்தில் தேவஸ்தானம் பணி நீக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்து, திருமலையில் காணாமல் போன நகைகள் குறித்தும், கோயிலில் சுரங்கம் தோண்டியது குறித்தும், தேவஸ்தான நிதி முறைகேடாக செலவு செய்யப்படுவது குறித்தும் ரமண தீட்சிதர் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த திருப்பதி தேவஸ்தானம், தேவஸ்தானத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, ரமண தீட்சிதர் மீது ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கையும் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், திருப்பதி தேவஸ்தானத் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பதி தேவஸ்தானத்தில் சமீப காலமாக பல முறைகேடுகள் நடந்து வருவதாகவும், மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டியதாகவும் செய்தித்தாள்களில் பிரசுரமாகிய செய்திகளை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, செய்தித்தாள்களில் வந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, இந்த வழக்கை ஏற்க இயலாது என நீதிமன்றம் கூறியது. அதேசமயம், சமீப காலமாக திருப்பதி தேவஸ்தானத்தின் மீது வரும் குற்றச்சாட்டுகளுக்கு தேவஸ்தானம் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.