திருப்பத்தூர் மாவட்டம் மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள தகரகுப்பம், குருபவாணிகுண்டா கிராமங்களின் வழியாக பாலாறு நதி செல்கின்றது. ஆந்திர அரசால் அமைக்கப்பட்டுள்ள கனகநாச்சியம்மன் கோயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைக்கே இக்கிராமங்களின் வழியாகத்தான் பாலாற்று நீர் செல்கிறது. இந்நிலையில் மல்லகுண்டா ஊராட்சி மக்கள் முகநூல் மூலமாகவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தடுப்பணை கட்ட வலியுறுத்தி மனுக்கள் அளித்தும் வருகின்றனர்.
தடுப்பணை கட்டுவதன் மூலம் குறைந்தபட்சம் பல்லாயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையாவது பூர்த்தியடையும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாவட்ட நீர்மேலாண்த் துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுவதற்கு உகந்த இடங்களாக கருதப்படும் சித்ரா பள்ளம் கூட்லுபள்ளம் மற்றும் பெரும்பள்ளம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். பெரியளவிலான அணைகள் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவிலான தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் இப்பகுதி மக்களின் நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்தலாம். ஆந்திராவிலிருந்து தூய்மையாக வரும் பாலாற்று நீர் வாணியம்பாடி நகரில் நுழைந்ததும் உபயோகிக்க முடியாத அசுத்த நீராக மாறிவிடுகிறது. இப்படி வீணாக போகும் நீரை தடுப்பணை கட்டுவதன் மூலம் குடிநீருக்காக பயன்படுத்த முடியும் எனவே தடுப்பணை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
-S.Mohan