“குழந்தைகள் நாளைய எதிர்காலத்தின் தலைவர்கள்” என்பது பெரியோர்கள் வாக்கு. இப்படிப்பட்ட குழந்தை செல்வங்கள் கல்வியின் முதல்படி எடுத்து வைக்கும் இடம் அங்கன்வாடி மையங்கள்தான். அவ்வளவு முக்கியத்துவம் பெறும் அங்கன்வாடிகள் அசுத்த மையங்களாக மாறினால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சந்தைப் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம் அசுத்தமான மற்றும் பாதுகாப்பற்ற அங்கன்வாடி மையமாக திகழ்வதால், இங்கு உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. போதுமான குடிநீர் வசதி இல்லை. அங்கன்வாடி மையத்தின் 100 அடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தும் இன்று வரை குடிநீர் இணைப்பு ஏற்படுத்தப்படாமல் இருப்பதால் அன்றாடம் குடிநீரை குடங்கள் மூலம் கொண்டு வந்து சமைக்க வேண்டிய சூழல். முக்கியமாக மின் இணைப்பு இல்லை.

மையத்தின் பின்பகுதி செடிகொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விஷப்பூச்சிகள் சாதாரணமாக உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. நாட்றம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் சுகாதார கேள்விக்குறியுடன் செயல்படுகிறது என்பது வேதனையளிப்பதாக இருப்பதாக குழந்தையின் தாய் ஒருவர் தெரிவித்தார்.
-S.Mohan