மத்திய அரசிடம் பதிவு செய்யாவிட்டால் வெளிநாட்டு வேலைக்கு போக முடியாது

0
1364

ஜனவரியில் இருந்து கட்டாய நடைமுறை மத்திய அரசிடம் பதிவு செய்யாவிட்டால் வெளிநாட்டு வேலைக்கு போக முடியாது. சவூதி, மலேசியா உட்பட 18 நாடுகளுக்கு பொருந்தும். தொழிலாளர் பாதுகாப்புக்காக அதிரடி நடவடிக்கை. சவூதி அரேபியா உட்பட 18 நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள், மத்திய அரசின் குடியேற்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது. இந்த நடைமுறை ஜனவரியில் இருந்து அமலுக்கு வருகிறது.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் பலர் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பலர் வேலை இழந்தும், அடிமைகளாக நடத்தப்பட்டும் அல்லல்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்கும் முயற்சியாக, வெளிநாடு செல்லும் இந்தியர்கள் தூதரகங்கள், குடியேற்ற இணையதளத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.

இதற்கிடையில், வெளிநாடு செல்லும் இந்திய தொழிலாளர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டாய நடைமுறையை செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான்-இசிஆர்’ எனப்படும் குடியேற்ற விசாரணை அவசியம் அல்லாத பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், இந்தோனேஷியா, ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், லிபியா, மலேசியா, ஓமன், கத்தா, சவூதி அரேபியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட், ஏமன் ஆகிய 18 நாடுகளுக்கு செல்லும்போது, வெளியுறவு அமைச்சகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வெளிநாடு செல்வதற்கு 24 மணி நேரம் முன்பாகவே www.emigrate.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட வசதி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் இருந்து நடைமுறையில் உள்ளது. ஆனால், கட்டாயம் ஆக்கப்படவில்லை. தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் இதில் பதிவு செய்து வந்தனர். சோதனை முறையில் செய்படுத்தப்பட்ட இந்த நடைமுறை சிறப்பாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து கட்டாயம் ஆக்கப்படுகிறது. மேற்கண்ட குடியேற்ற இணையதளத்தில் பதிவு செய்யாத, நான்-இசிஆர் பாஸ்போர்ட் வைத்துள்ள தொழிலாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உதவி மையத்தை அணுகலாம். அல்லது 1800 11 3090 (கட்டணம் இல்லாதது), 01140503090 (கட்டணங்கள் உண்டு) எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். helpline@mea.gov.in முகவரிக்கும் இமெயில் அனுப்பி விளக்கம் பெறலாம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here