புதிதாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, முறையே 11 மணி முதல் தொடங்கி பிற்பகல் 1 மணிவரை நடைபெற்றது. ஆனால் பொதுமக்களின் வருகையின்றி பெயரளவிற்கு நடந்து முடிந்தது. மதியம் 12 மணி வரையில் வெறும் 42 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டிருந்தது. இதற்கான காரணம் என்னவென்று விசாரிக்கையில்;
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என்ற விஷயம் ஊரகப் பகுதியில் வாழும் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாததே காரணமாக அமைந்துள்ளது. ஒருசில ஊராட்சிகளிலிருந்து ஒரு மனுக்கள் கூட பெறப்படவில்லை என்பது வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட வட்டார நிர்வாகம் ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்கு முறையான தகவலை கொண்டு சேர்ப்பதில் அக்கறை காட்டவில்லையா? மாவட்ட ஆட்சியரின் பொன்னான அலுவல் நேரத்தையும் வருவாய்த்துறை ஊழியர்களின் நேரத்தையும் வீணடிக்கும் இது போன்ற கூட்டங்கள் எதற்கு என்று கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். மக்களின்றி மக்கள் குறைதீர்வு கூட்டம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?.
-S.Mohan