திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது. குரவர் வட்டம் இங்கு சுமார் பதினைந்து குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவ்வட்டத்திற்கு செல்லவேண்டும் என்றால் திகுவாபாளையம் ஏரிக்கரையின் வழியே சென்று ஏரிக்கு நீர்வரத்து வரும் சிறிய கணவாயை தாண்டித்தான் உள்ளே செல்லமுடியும். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தால் இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு சிரமமின்றி சென்று வர ஏதுவாக கணவாய் குறுக்கே சிறிய அளவிலான பாலத்தை அமைத்தது. பாலத்தை கட்டிய சில வருடங்களிலேயே பாலத்தின் உறுதி தன்மை இழந்து இடிந்து விழுந்துள்ளது.
உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் குரவர் வட்டம் மக்கள் பலமுறை புகார் அளித்தும் இப்பாலத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கையை இன்றுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதி மக்கள் ஒன்றாக சேர்ந்து தங்களுக்குள் பணவசூல் செய்து தாங்களே இப்பாலத்தை சீரமைத்துள்ளனர். இருந்தும் அதுவும் கட்டிய சிலநாட்களிலேயே இடிந்து விழுந்ததால் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனால் இக்கிராமம் மற்ற கிராமத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக இக்கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட கரையின் அப்பால் சென்றுதான் கொண்டு வரவேண்டிய அவலநிலைக்குத் தாங்கள் தள்ளப்புட்டுள்ளதாக இக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் மீது இக்கிராம மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சேதமடைந்த பாலத்தையும் சீரமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க இக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
-S.Mohan