ஆதார் அட்டை இந்திய நாட்டில் வசிக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக மாறியிருக்கும் சூழ்நிலையில் அரசின் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெறவேண்டுமெனில் ஆதார் அட்டை கட்டாயமாக மாறிப்போயுள்ளது. இந்நிலையில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தில் கடந்த ஒன்றரை மாதமாக ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பணிபுரிந்து வருவதால் ஆதார் சம்பந்தப்பட்ட சேவைகளுக்காக தினந்தோறும் வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்ற அவலநிலை நிலவுகிறது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூச்சல் போடவே தாசில்தார் சுமதி மற்றும் நாட்றம்பள்ளி காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் சமரசம் செய்துவைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பச்சூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்மாள் எனும் வயதான மூதாட்டி ஒருவர் கூறுகையில்;
“நானும் என் பேரனும் கடந்த இரண்டு வாரங்களாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்திற்கு எனது பேரனின் ஸ்காலர்ஷிப் பணத்தை எடுக்க ஆதார் அட்டையில் திருத்தம் வேண்டி அலைகிறேன். ஆனாலும் இன்றுவரை எனது வேலை முடிந்தபாடில்லை சிலநாட்களில் நாங்கள் மதியஉணவு இல்லாமல் கூட இருந்திருக்கிறோம். இதுபோன்ற அலைக்கழிப்புகள் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது” என்று துக்கத்துடன் தெரிவித்தார். எனவே சம்பந்தப்பட்ட ஆதார் மையத்தில் நடக்கும் குளறுபடிகளை களைய ஆதார் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-S.Mohan