திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், நில அளவை அலுவலர், பூவிதா மீது கடந்த சில நாட்களாக லஞ்சப் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பச்சூர் அடுத்த பழைய பேட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் நிலம் அளக்க முப்பதாயிரம் ரூபாய் கேட்டது தொடர்பாக தினசரி நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளது. இதுமட்டுமல்லாது இவர் நிலம் அளப்பதற்கு பலபேரிடம் பத்தாயிரம் முதல் இருபத்தைந்து ஆயிரம் வரை லஞ்சம் வாங்கி உள்ளார். கொரோனா நோயால் மனித இனங்கள் கொல்லப்பட்டு வரும் இந்த வேளையில் இது போன்ற சில பணக் கொள்ளையில் ஈடுபடும் அதிகாரிகளால் தினசரி வேலையிழந்து ஒரு வேலை சோற்றுக்கு கூட போராட வேண்டிய நிலையில் உள்ள சாமானியர்கள் நிலம் அளப்பது என்பது சாத்தியமில்லாதது. இந்த அவலம் இப்பகுதியில் நடப்பது வேதனை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்ட தனிவட்டாட்சியர் மீது ஊழல் புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்ட மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். எனவே இதுபோன்ற லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-S.Mohan