பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் எழுத்தாளரிடம் விசாரணை நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) கடந்த 5-ம் தேதி பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கவுரி லங்கேஷின் சகோதரர் இந்திரஜித் லங்கேஷ், பிரபல ரவுடி குனிகல் கிரி உள்ளிட்டோரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் கவுரி லங்கேஷூடன் கருத்து மோதலில் ஈடுபட்ட பெங்களூருவைச் சேர்ந்த எழுத்தாளர் விக்ரம் சம்பத்திடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது கவுரி லங்கேஷின் கொலை தொடர்பாகவும், இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்பாகவும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இந்த விவகாரம் கன்னட எழுத்தாளர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விக்ரம் சம்பத் கூறுகையில், ‘‘கவுரி லங்கேஷ் கொலை நடந்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். இருப்பினும் வழக்கமான நடைமுறைக்காக போலீஸார் என்னை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்தனர். இது சரியான அணுகுமுறை இல்லை என்றாலும், சட்டத்தை மதித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். கவுரி லங்கேஷ் என்னை பற்றி மட்டுமல்லாமல் எனது குடும்பத்தினரை பற்றியும் அவரது பத்திரிகையில் எழுதி வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸார் அவர்களையும் விசாரிப்பார்களா? கொலை செய்தவர்களை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்துவார்களா? என்னை விசாரித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்”என்றார்.