பழங்குடி மாணவர்களின் வாழ்வை மாற்றும் ஆசிரியை

0
1353

பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளி ஒன்றில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியை. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க, தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் மகாலட்சுமி. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையின் உச்சியில் ஜமுனா மரத்தூருக்கு அருகில் அமைந்திருக்கிறது மலை கிராமான அரசவல்லி. முழுக்க முழுக்க பழங்குடியினரே வசிக்கும் இந்த கிராமத்தில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் பள்ளியில் செகண்ட்ரி க்ரேட் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மகாலட்சுமி. பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியுள்ள இந்த உண்டு – உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மகாலட்சுமியைத் தங்கள் சக மாணவராகவே பார்க்கிறார்கள். மாணவருக்கும் மகாலட்சமிக்கும் இடையிலான உரையாடல்கள், இரு நண்பர்களுக்கு இடையிலான உரையாடல்களைப் போலவே அமைந்திருக்கின்றன. ஆனால், இந்த நிலையை வந்தடைய அவர் கடந்த பாதைகள் மிகக் கடுமையானவை.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மகாலட்சுமியின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் என்ற குக்கிராமம். சற்று வசதியான குடும்பத்தில்தான் பிறந்தார் என்றாலும், அவர் பிறந்து சில வருடங்களிலேயே வீட்டில் நிலைமை மோசமடைந்தது. தாய் – தந்தை இடையே பிடிக்காத திருமணம். இதனால், வீட்டில் ஏற்படும் சண்டைகள். ஒரு கட்டத்தில் தாய்க்கு மனநலம் பாதிக்கப்பட, வீடே உருக்குலைந்து போனது. அதுவரை வேலைக்குச் சென்றுவந்த அவரது தாயார் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட, வீட்டில் வறுமை சூழ ஆரம்பித்தது. இதனால், அவரது சகோதரி தன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போய் தங்கையைப் படிக்க வைக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பில் 402 மதிப்பெண்களும் 12ஆம் வகுப்பில் 1052 மதிப்பெண்களும் எடுத்த மகாலட்சுமி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து இரண்டாண்டுப் படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு தான் படித்த பள்ளியிலேயே சில நாட்கள் வேலை பார்த்தவர், வேறொரு பள்ளியில் தற்காலிப் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு இந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் அரசவல்லியில் நடத்தப்பட்டுவந்த பள்ளியில் சேர்ந்தார்.

2006ஆம் ஆண்டில் மகாலட்சுமி இந்தப் பள்ளிக்கூடத்திற்குள் முதல் நாள் நுழைந்தபோது, தலைமையாசிரியை இல்லை. வாயில் காவலர் இருந்தார். மாணவர்கள் யாரும் இல்லை. “குழந்தைகள் எங்கே எனக் கேட்டேன். குழந்தைகள் எல்லாம் தொடர்ந்து வர மாட்டார்கள். மதிய நேரத்தில் வந்து உணவை வாங்கிவிட்டுச் சென்று விடுவார்கள் என்று சொல்லப்பட்டது” என்று அந்த நாளை நினைவுகூறுகிறார் மகாலட்சுமி. அதேபோல மதிய நேரத்தில் வந்த சில குழந்தைகள் உணவை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்று மதிய உணவின் தரம் படுமோசமாக இருந்தது. மாணவர்களே இல்லாததால், பள்ளிக்கூடமே கிட்டத்தட்ட மூடும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, அந்த மலையில் அமைந்திருந்த 23 பள்ளிக்கூடங்களிலும் அதுதான் நிலையாக இருந்தது. முக்கியமான காரணம் அந்தப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் கிடையாது என்பதுதான். ஆனால், வருகைப் பதிவேட்டை எடுத்துப் பார்த்தால், பல குழந்தைகளின் பெயர்கள் இருந்தன. பெரும்பாலானவை போலிப் பெயர்கள். அவர்களுக்கான உணவுப் பொருட்கள் வந்துகொண்டிருந்தன.

குழந்தைகளுக்கு வரும் உணவு எங்கே செல்கிறது என்ற கேள்வியைக் கேட்க வேண்டுமானால், குழந்தைகள் வேண்டும் என்பது மகாலட்சுமிக்குப் புரிந்தது. புதிதாக ஆசிரியர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு இரண்டாவது நாள் 3 பெண் குழந்தைகள் மட்டும் வந்தார்கள். எப்படியாவது மாணவர்களைப் பள்ளிக்கு ஈர்க்க முடிவுசெய்த மகாலட்சுமி, ஒவ்வொரு வீடாகச் சென்று குழந்தைகளை அழைக்க ஆரம்பித்தார். “அப்போது அந்தந்த வீட்டிலிருப்பவர்களே எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். வீட்டு வேலையை யார் பார்ப்பார்கள் என கேட்பார்கள். என்ன ஜாதி எனக் கேட்பார்கள். ஆனால், கொஞ்ச நாட்களில் புரிந்துகொண்டார்கள்”. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் வர ஆரம்பித்தார்கள். அவர்களும் மதியம் வரைதான் இருந்து சாப்பிட்டுவிட்டு பிறகு ஓடிவிடுவார்கள். இதனால், அவர்களைத் தக்கவைக்க கார்ட்டூன் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார் மகாலட்சுமி. “மிக சுவாரஸ்யமான கட்டத்தில் கதையை நிறுத்திவிடுவேன். அடுத்த நாள் வந்தால்தான் மீதிக் கதையைச் சொல்வேன். பிறகு என்னிடமிருக்கும் சிறிய அளவில் காசில், பிஸ்கெட் வாங்கிவந்து, அவர்களுக்கு பகிர்ந்தளிப்பேன். அப்படியிருந்தாலும் இரண்டு – மூன்று பேர் ஓடிவிடுவார்கள். மெல்லமெல்ல குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற ஆரம்பித்தேன்” என்கிறார் அவர். அந்தத் தருணத்தில் குழந்தைகள் மிக மோசமான வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆனால், முதலில் இங்கே குழந்தைகளைக் கொண்டுவருவதுதான் முக்கியம் என்று நினைத்ததால் அதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகுதான் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தபோது, அவர்களது நிலை மிக மோசமாக இருந்தது. துணிகள் கிழிந்து, பரட்டைத் தலையுடன் மோசமான நிலையில் இருந்தார்கள். இதனால் தானே சோப்பு வாங்கிவந்து அவர்களைக் குளிப்பாட்டுவார் மகாலட்சுமி. ஊரிலிருந்த வசதியானவர்களைக் கேட்டு, சிலருக்கு உடைகளை வாங்கிக் கொடுத்தார்.

அடுத்ததாக உணவில் இருந்த முறைகேட்டை தடுத்த நிறுத்த, அது தொடர்பாக கேள்வி கேட்க ஆரம்பித்தார். முதலில் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைக்க ஆரம்பித்தது. பிறகு குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே தங்கத் துவங்கினார்கள். ஒரு நாளிதழ் ஒன்றிலும் இது தொடர்பாக செய்தி வெளியானது. இதனால், நிலைமை சற்று மேம்பட ஆரம்பித்தது. 2006ல் 10 குழந்தைகள்கூட இல்லாத இந்தப் பள்ளியில் தற்போது ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை 417 குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் மலை கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர். முதல் தலைமுறையாக பள்ளிக்கு வருபவர்கள். பல குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலை பார்ப்பவர்கள் என்பதால், குழந்தைகளைக் கவனிக்க நேரம் இருக்காது. ஆகவே குழந்தைகள் தங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, முடிவெட்டுவது ஆகியவற்றைச் சொல்லக்கூட அவர்களுக்கு ஆளிருக்காது.

“சரி, அதையும் நாமே செய்யலாம் என செய்ய ஆரம்பித்தேன். ஒரு சலூனில் சென்று முடிவெட்டக் கற்றுக்கொண்டேன். இப்போது யாராவது முடிவெட்டாமல் இருந்தால் நானே வெட்டிவிட்டு, குளிக்க வைத்துவிடுவேன். என் பிள்ளையாக இருந்தால் செய்ய மாட்டேனா?” என்கிறார் மகாலட்சுமி.

இவர் தொடர்ந்து குழந்தைகளுக்காகச் செலவழிப்பது இவரது குடும்பத்திலும் சில சச்சரவுகளை உருவாக்கியிருக்கிறது. “இப்போது கணவர் புரிந்துகொண்டிருக்கிறார்” என்கிறார் மகாலட்சுமி. 13 ஆண்டுகளுக்கு முன்பாக மூடும் நிலையில் இருந்த இந்தப் பள்ளி தற்போது புதிய கட்டங்களுடன் காட்சியளிக்கிறது. நூலகம், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவையும் இருக்கின்றன. மேல்நிலைப் பள்ளியாக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. “மனப்பாடம் செய்து, அதையே திரும்ப எழுதும் கல்வி முறைக்கு மாறாக அவர்களை முழுமையான ஆளுமையாக்குவது எனக்கு முக்கியமாகப்படுகிறது” என்கிறார் மகாலட்சுமி. இவரது பணி பலராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்கள் கவனிக்கின்றன. இருந்தபோதும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மோசமாக இருந்தால் அதைச் சுத்தம் செய்யத் தயங்குவதில்லை.

மகாலட்சுமியின் இந்தப் பணி, பல பழங்குடியினக் குழந்தைகளின் வாழ்வை மாற்றியிருக்கிறது. அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தனிமனிதர்களின் செயல்பாடுகள், ஒரு சமூகத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு மகாலட்சுமி ஒரு உதாரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here