பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சியில் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம் முக்கிய அம்சமாக திகழ்கிறது: மத்திய இணை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங்

0
746

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சியில் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம் முக்கிய அம்சமாக திகழ்கிறது என்று மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் நடைபெற்ற இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாகவும், தொழில்நுட்பம் தொடர்ந்து நிர்வாகத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

அதிகாரிகள் மேலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் வகையில் கர்மயோகி இயக்கம் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். குறைதீர்ப்பு நடவடிக்கைகளும் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அனைத்து 75 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மின் அலுவலக (இ-ஆபிஸ்) 7 வது பதிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் இது டிஜிட்டல் மாற்றத்தில் மற்றொரு முன்னேற்றம் என்றும் அவர் கூறினார். மத்திய செயலகத்தில் உள்ள கோப்புகளில் 89.6 சதவீதக் கோப்புகள் மின் கோப்புகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி தேசத்தின் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார். 2047ம் ஆண்டில் நாடு சுதந்திரத்தின் 100 வது ஆண்டை கொண்டாடும் போது இங்கு பயிற்சி பெற்ற குடிமைப் பணி அதிகாரிகள் மூத்த அதிகாரிகளாக முக்கியப் பொறுப்பில் இருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த 25 ஆண்டுகளில் சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்துடன் மனித தலையீட்டை சமநிலையில் பயன்படுத்த வேண்டியது முக்கியமானது என்றும், இதன் மூலம் நல்ல பலன்களைப் பெற முடியும் என்றும் திரு. ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

-PIB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here