கஜா புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கஜா புயலினால் கடும் சேதம் அடைந்துள்ளது. அதற்குத் தேவையான நிதியை பெறுவதற்காக பிரதமரை காலையில் சந்தித்து, கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை அவருக்கு விளக்கி கூறினேன். சேத விவரங்கள் அடங்கிய மனுவையும் சமர்பித்துள்ளேன்.
தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக 1,500 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டுமென்று பிரதமரிடத்திலே வலியுறுத்தியுள்ளேன். நிரந்தர சீரமைப்புக்காக 15,000 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக மத்தியக் குழு பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கிட்டு நிவாரணத்தை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளேன். சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட உடனடியாக மத்தியக் குழுவை அனுப்பி வைப்பதாக பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.
கஜா புயலினால் பாதிக்கப்பட்டவுடனேயே உடனடியாக அதிகாரிகளை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்து சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு அதை தற்போது பிரதமரிடத்தில் அளித்துள்ளேன். தமிழ்நாடு அரசு என்ன செய்யவேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறது. அதற்காகத்தான், முதற்கட்டமாக தமிழ்நாடு அரசால் 1000 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு நான் நேரில் சென்று பல குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறேன். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் வழங்குவதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும், உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30,000 ரூபாய், காளை மாடுகளுக்கு தலா 25,000 ரூபாய், ஆடுகளுக்கு தலா 3,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த குடிசை ஒன்றிற்கு 10,000 ரூபாய், பகுதி சேதடைந்த குடிசை ஒன்றிற்கு 4,100 ரூபாய், முழுவதும் சேதம் அடைந்த குடிசைகள், வீடுகளுக்கு பதிலாக, தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதிதாக வீடு கட்ட உரிய நிதியை அரசு வழங்கும்.
தி.மு.க. ஆட்சியில், 2008-ல் நிஷா புயல் வந்தபொழுது உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், கால்நடை இழப்பிற்கு ரூ.10 ஆயிரம், உயிரிழந்த ஆடுகளுக்கு ரூபாய் ஆயிரம், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே கொடுத்தார்கள். 2010-ல் தி.மு.க. ஆட்சியின் போது ஜல் புயல் வந்தபொழுது உயிரிழந்து குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், கால்நடை இழப்பிற்கு ரூ.10 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், பகுதி சேதமடைந்த குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே கொடுத்தார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டதையும், தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது எவ்வளவு இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதென்று நன்கு தெரியும். இதனை எதற்காகச் சொல்கிறேன் என்று சொன்னால், பொய் சொல்வதற்காக அல்ல, எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இழப்பீட்டுத் தொகை குறைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தவறான தகவலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அது உண்மையல்ல.