திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சந்தை மைதானத்திற்கு அருகே அமைந்துள்ளது 1.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி. இதன் மூலம் நகர பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இக்குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்று சந்தை மைதானத்தின் ஒரு பகுதியையே சிறிய குட்டை போல மாற்றியுள்ளது. இவ்விடம் நிரம்பிய நிலையில் அருகில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்குள் புகுந்து, துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் அருகில் இருக்கும் வட்டாட்சியர் அலுவலகம் வரை துர்நாற்றம் செல்லும் நிலை உருவாக்கி உள்ளது. இனியும் இதே நிலை தொடர்ந்தால் புதிய நோய்களின் பிறப்பிடமாக இவ்விடம் மாற வாய்ப்புள்ளது.


எனவே மழைக்காலம் தொடங்கி உள்ளதால் நிலைமை மோசமாகாமல் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-S.Mohan