நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து பொது மேடையில் ஆபாசமாகப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் கொலையுதிர் காலம். இந்தப் படத்தில் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பூஜா என்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, ‘ நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை பற்றி வராத செய்தியே இல்லை. ஆனாலும் அவர் சினிமாவில் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். அப்புறம் மறந்துடுவாங்க’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார். அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் புனிதமான கதராபாத்திரத்தில் நடிப்பதற்கு, கே.ஆர். விஜயா போன்ற நடிகைகளைத் தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்’ என்று ஆபாசமாகப் பேசினார்.
ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சு அங்கிருந்தவர்களை முக சுழிக்க வைத்தது. இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. நயன்தாராவை குறித்து பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடகி சின்மயி கேட்டு கொண்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் கும்பிடுகிற மாதிரி இருக்கிற கே.ஆர்.விஜயா போன்றவர்களைத்தான் சீதை வேடங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் இப்போது கூப்பிடுகிற மாதிரி இருக்கிற நயன்தாரா போன்றவர்களையெல்லாம் கூட சீதை வேடத்தில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள்’ என்று ‘கொலையுதிர்காலம்’ பட விழாவில் ராதாரவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் அவர் திமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ராதாரவி.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ள நயந்தாரா, ‘’என்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். மூத்த நடிகரான ராதாரவி,
இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைகிறார். பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? கடவுள் கொடுத்த வரத்தால் திரையுலகில் சிறப்பான இடம் கிடைத்துள்ளது. ராதாரவி தொடர்ச்சியாக மேடைகளில் நடிகைகளைப் பற்றி இழிவாக பேசி வருகிறார். அவரை கட்சியை விட்டு நீக்கி கண்டித்ததற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என அவர் தெரிவித்துள்ளார்.