கல்வி ஆண்டுக்கான பாடங்களைப் படித்துத் தேர்வு எழுதுவது என்பதே நடைமுறை. ஆனால், ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் என மதிப்பெண் வாரியாக உள்ளடக்கத்தைத் தொகுத்துத் தயாரிக்கப்படும் வினாவங்கி வகைப் புத்தகங்கள் வருகின்றன. இவை புத்தகம் படிக்கும் பழக்கத்திலிருந்து வினாவங்கியை மட்டும் படித்துத் தேர்வு எழுதும் பழக்கத்துக்கு மாணவர்களைத் தள்ளியுள்ளன.
கடந்த காலத்திலும் இப்படியான வினாவங்கிப் புத்தகங்கள் உண்டு. என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக வினாவங்கி சார்ந்து தேர்வு எழுதுவது அதிகரித்துள்ளது. பாடப் புத்தகங்களைப் படித்தல், வினாவங்கியில் பயிற்சி என்ற நிலை மாறி, புத்தக வாசிப்பை முற்றிலும் கைவிட்டு வினாவங்கியை மட்டும் படிக்கும் மாணவர்களாக அநேகர் இன்று மாறி வருகின்றனர். இந்த நிலை மாணவர்களின் கல்வித் திறனை மழுங்கடிக்கும் செயல்.
வினாவங்கி மோகத்துக்குப் பெற்றோர்களும் காரணமாகின்றனர். பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் புத்தகம் வாங்க வேண்டும் என்று சொன்னால் ‘என்ன புத்தகம், எதற்காக அந்தப் புத்தகம் வேண்டும்?’ என்ற அடிப்படைக் கேள்விகளையாவது கேட்டுவிட்டுத் தேவை எனில் மட்டும் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.
தரமான பல நல்ல நூல்களைப் பதிப்பகங்கள் வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்பெறலாம். வினாவங்கி போன்ற புத்தகங்கள் வெறும் வினாவுக்கு விடையளிக்கும் இயந்திரமாக மாணவர்களை மாற்றுபவை. இதனால் எந்தக் கருத்து குறித்த புரிதலுமின்றி மேலோட்டமாகத் தகவலைச் சேகரிக்கும் போக்கு மட்டுமே அதிகரிக்கும். இது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பாதகமானது.
வியாபார உத்திகளின் பலிகடாக்களாக மாணவர்கள் மாறுவதைத்தான் இது காட்டுகிறது. எந்தப் பொருளானாலும் அதன் தேவை, பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாங்கும் பழக்கத்தைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம்.