மின்னணுமயமாகி வரும் பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் மோடி எழுத்து ஆவணங்கள்

0
1080

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எழுதுவது, வரைவது என அனைத்துமே மின்னணுமயமாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் மோடி எழுத்து ஆவணங்களை ‘மின்னணுமயமாக்கும்’ பணிகள் துவங்கியுள்ளன. மோடி என்ற சொல் “மோடனே” என்கின்ற மராட்டிய சொல்லிலிருந்து உருவானது.

டெல்லி தேசிய சுவடி இயக்கம், தமிழ்நாடு அரசு மின்நூலகத் திட்டம், பிரிட்டிஷ் நூலகம் ஆகியவற்றின் நிதி ஆதரவோடு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை மின்னணுமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ் ஓலைச்சுவடியில் உள்ள சிற்றிலக்கியம், மருத்துவம், ஜோதிடம், பாட்டும் தொகையும், மெய்கண்ட சாத்திரம், தத்துவம் என 18 பிரிவுகளில் சுவடிகள் பிரிக்கப்படுகின்றன.

தமிழிலுள்ள 4,500 ஓலைச்சுவடி கட்டுகள், சமஸ்கிருதம் – 1,000 கட்டுகள், பாலி மொழி – ஒரு கட்டு, தெலுங்கு – 50 கட்டு, கன்னடம் – ஏழு, கட்டு என 6,000க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடி கட்டுகள் மின்னணுமயமாக்கப்படுகின்றன. அதேபோல் மகாராஷ்டிர அரசுடன் இணைந்து மோடி எழுத்துகளால் எழுதப்பட்ட அரிய கையெழுத்து ஆவணங்கள் தமிழ் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்பட்டு அந்த ஆவணங்களும் மின்னணுமயமாக்கப்பட்டு வருகிறது.

டெல்லி தேசிய சுவடிகள் இயக்கம் சார்பில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான சுவடிகளை மின்னணுமயமாக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழ் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள சுவடிகளைப் பாதுகாக்க டெல்லி தேசிய சுவடிகள் இயக்கம் ஆண்டுதோறும் 7 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வருவதுடன், தமிழகத்தில் இரண்டாவது சுவடிகள் பாதுகாப்பு மையத்தை உருவாக்கி அதை அங்கீகரித்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகம் அழியும் நிலையில் உள்ள ஆவணங்களைக் காக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள சுவடிகளைப் பாதுகாக்க இரண்டு ஆண்டுகளில் இந்திய மதிப்பில் 48.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் பாலசுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள இந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், 1984ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சுவடி புலம், தமிழகத்தில் மிக முக்கிய ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய கையெழுத்துகளை சேகரித்து வைக்கும் துறையாகும். மகாராஷ்டிர அரசுடன் இணைந்து மோடி எழுத்துகளாலான ஆவணங்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடித் துறையிலுள்ள ஓலைச்சுவடிகளை மின்னணுமயமாக்கம் செய்து அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசுடன் இணைந்து அண்ணா நூலகத்தின் உதவியுடன் ஓலைச்சுவடிகளை மின்னணுமயமாக்கம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மின்னணுமயமாக்கம் செய்யப்படும் ஓலைச்சுவடிகள் அண்ணா நூலகம், தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இதனை உலகெங்கும் உள்ள தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மோடி ஆவணத்தை பொறுத்தவரை, 10 லட்சம் பக்கங்கள் உள்ளன. இதனை மின்னணுமயமாக்கம் செய்வதற்காக மகாராஷ்டிர அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் மோடி ஆவணங்களை மின்னணுமயமாக்கம் செய்ய மகராஷ்ட்ரா அரசு ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறி தற்போது வரை 73 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட பணத்தை வைத்து இதுவரை 5 லட்சம் பக்கங்கள் மின்னணுமயமாக்கம் செய்யபட்டுவிட்டன. மீதமுள்ள 5 லட்சம் பக்கங்களை மின்னணுமயமாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மின்னணுமயமாக்கம் செய்வதின் முக்கிய நோக்கம், எதிர்கால சந்ததியினர் பயன்படுத்துவதற்குப் பாதுகாத்து வைப்பது. இரண்டாவது உலகெங்கிலும் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது என்கிறார் பாலசுப்பிரமணியன்.

பனை ஓலைச்சுவடிகளை மின்னணுமயமாக்குவது குறித்து பேசிய கோவை ஓலைச்சுவடித் துறையின் திட்ட உதவியாளர் முனைவர் மணி, ஆரம்பத்தில் எழுத்தை அழியாமல் பாதுகாக்க, பானை ஓடுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், களிமண் பலகை, உலோகத் தகடு, துணி, இலை, பனையோலை, மரப்பட்டை, மரப்பலகை, விலங்குகளின் தோல், மூங்கில் பத்தை ஆகியவற்றால் பதிவு செய்தனர்.

பனையோலையைத் தவிர மற்றவை விரைவில் அழிந்துவிட்டன. இதனால், ‘பழந்தமிழர்கள் அதிக அளவில் பனையோலைகளைப் பயன்படுத்தினர். காகிதம் கண்டுபிடிக்கும் வரை பனையோலை முறைதான் தெற்காசிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பழங்கால முக்கிய குறிப்புகள் அனைத்து அப்போது வாழ்ந்த பழந்தமிழர்கள் பனை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தனர்’.

அப்படிப்பட்ட பண்டைய கால வரலாற்றுக் குறிப்புகளைத் தாங்கியுள்ள பனை ஓலைச்சுவடிகள், எதிர்கால ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில்தான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ‘இப்போது உள்ள சூழ்நிலையில் ஆய்வாளர்கள் பல்வேறு நூலகங்களுக்குச் சென்று படிக்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால் அறிவியல் வளர்ச்சி காரணமாக ஆய்வாளர்கள் இருக்கும் இடத்திலே ஓலைச்சுவடிகளைப் படிக்கும் நோக்கில் தான் மின்னணுமயமாக்கப்பட்டு’ வருவதாக அவர் கூறுகிறார்.

ஓலைச்சுவடிகளை வைத்து இருப்பவர்கள், முறையான பாதுகாப்பு இல்லாமல் பூஞ்சைகள், கரையான் போன்றவற்றால் சேதப்படுத்தப்பட்டு மிக மோசமான நிலையில்தான் எங்களிடம் கொடுப்பார்கள்.

அவற்றை சேகரிக்கும் நாங்கள் தமிழ் பல்கலைக்கழகத்திலுள்ள ‘ஆய்வாளர்களைக் கொண்டு முறையாக வரிசைப்படுத்தி, அதில் உள்ள கறைகளை நீக்கி, சுத்தம் செய்த பின் ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துகள் தெரியாவிட்டால் அதன் மீது மை மற்றும் எண்ணெய் பூசி தெளிவுபடுத்திக் காப்பு சட்டமிட்டு, முறையாக எண்கள் இட்டு அதன் பிறகுதான் அந்த சுவடிகளை நூலகத்திற்குள் கொண்டு சேர்ப்போம். அதன் பின் அவைகளை மின்னணுமயமாக்கம் செய்து இணையத்தில் பதிவு செய்கிறோம்’ என்றார்.

மோடி எழுத்துக்களை மின்னணுமயமாக்கம் செய்வது குறித்து அரிய கையெழுத்து திட்ட உதவியாளர் முனைவர் கண்ணன் பேசுகையில், “மோடி எழுத்துகளை எழுதப் பயன்படுத்திய தாள்கள் (பேப்பர்) கை தயாரிப்பு தாள்களாக உள்ளன. மரகூழ், மரப்பட்டைகள், பஞ்சு ஆகியவற்றை அரைத்து இந்த தாள்களை உருவாக்கியுள்ளனர். அதனால் அவற்றை நம்மால் எளிதாகப் பராமரிப்புக்கு உட்படுத்த முடிகிறது.

அடுத்தாக, நாம் தற்போது பயன்படுத்தக் கூடிய மை, தண்ணீர் பட்டவுடன் எழுத்து மாற்றம் ஏற்படும். ஆனால் மோடி எழுத்துகள் எழுதப்பட்ட தாள்களைத் தண்ணீரில் நனைத்து எடுத்தாலும் எளிதில் எழுத்து மாற்றம் ஏற்படாத வகையான மை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நம்மால் இந்த மோடி ஆவணங்களை எளிதாக பராமரிக்க முடிகிறது.

தற்போது மராட்டிய பகுதிகளில் பேசக் கூடிய மராட்டிய மொழியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறை மராட்டிய மொழியில் உள்ளது. அதே சமயத்தில் தமிழ் பொருள் கொண்டுள்ளது.

மேலும், இந்த மராட்டிய எழுத்து, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மராட்டிய எழுத்துகளில் இல்லை என்பதால்தான் இதனை மராட்டிய ஆவணங்கள் என்று சொல்லாமல் மோடி ஆவணங்கள் என்று அழைக்கிறோம்.

ரகசியங்கள் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த எழுத்துகளைப் பயன்படுத்தி இருக்கலாம். மோடி எழுத்து முறையை பொறுத்தமட்டில் எழுதுகிற தாள்களிலிருந்து எழுதுகோலை (பேனாவை) எடுக்காமலேயே சங்கிலி தொடர்பு போல எழுதலாம் அப்படி எழுதும்போது விரைவாக எழுதலாம் என்பதால் மோடி எழுத்துகளைப் பயன்படுத்தி இருக்கலாம்.

எனவே, விரைவாக எழுதுவது மற்றும் மறை பொருள்கள் (ரகசியம்) காக்கப்படுதல் போன்றவற்றிற்காக தான், வழக்கமான மராட்டிய மொழியிலிருந்து இந்த ஆவணங்கள் வேறுபட்டுள்ளன.

மோடி என்ற சொல் “மோடனே” என்கின்ற மராட்டிய சொல்லிலிருந்து உருவானது. “மோடனே” என்றால் ஒரு மொழியைச் சுருக்கமாக அல்லது உடைத்து எழுதுதல் என்று பொருள் என்கிறார் பேராசிரியர் கண்ணன்.

மோடி எழுத்துமுறை

மராட்டி மொழியை எழுதப் பயன்படும் சுருக்கெழுத்து முறைகளில் ஒன்று மோடி எழுத்துமுறை ஆகும். மோடி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் தேவநாகரி வடிவத்தை அடியொற்றியவையாயினும் அதிலுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டு, குறில், நெடில் வேறுபாடுகள் இன்றி இடத்துக்குத் தக்கவாறு பொருள்கொள்ளும்படி அமைந்து, எழுதுகோலை காகிதத்திலிருந்து எடுக்காமல் வேகமாக எழுத வசதியாக அமைந்தவை.

வரலாறு:

இசுலாமிய ஆட்சியாளர்கள் பார்சி மொழியை எழுதுவதற்கு இருவகை வரிவடிவங்களைப் பயன்படுத்தினர். தெளிவாகவும், மெதுவாகவும் எழுதுவதற்கு ‘நாஸ்தலிக்’ என்னும் முறையும், விரைவாக எழுதுவதற்கு ‘சிகஸ்த’ என்னும் முறையும் பயன்படுத்தப்பட்டது. இதைக்கண்ட தேவகிரி யாதவ அரசர்களின் முதன்மை அமைச்சராக (கி.பி. 1259 – 1274) இருந்த ஹேமாத்பந்த் (எ) ஹேமாத்ரி பண்டித் என்பவர் மராட்டி மொழிக்கும் இச்சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார்.

பெயர்க்காரணம்:

“மோடணே” (मोडणे) என்கிற மராட்டிச் சொல்லுக்கு “உடைத்தல்” என்று பொருள். தேவநாகரி வடிவத்தை உடைத்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கருதலாம். இதைத் தவிர்த்து, இலங்கையிலிருந்து வந்த எழுத்துமுறை என்பதுவோ, “மௌர்யி” என்ற அசோகனது எழுத்துமுறையிலிருந்து உருவானது என்பதுவோ, “குடில லிபி”யிலிருந்து வந்தது என்பதுவோ, சிவாஜி காலத்து பாலாஜி ஆவஜி என்பவர் உருவாக்கியது என்பதுவோ ஆதாரங்களற்ற ஒவ்வாத கருத்துக்கள் என்று உசாத்துணை நூலின் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மோடி எழுத்துமுறை:

சத்திரபதி சிவாஜியின் காலத்தில் மகாராஷ்டிராவிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த மராட்டியர், மோடி எழுத்துமுறையையும் தமிழகம் கொணர்ந்து பயன்படுத்தினர். கி.பி. 1676இல் ஏகோஜி (அ) வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றி ஆளத்தொடங்கியது முதல் கி.பி.1855இல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான மோடி ஆவணங்கள் கிடைத்துள்ளன.

தற்போதும் மோடி எழுத்துமுறையை கணக்கர்கள் குறியீட்டு மொழியாக பயன்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here