இந்தியாவிலேயே முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்துப் படகு புதுச்சேரியில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல், கடல்வழியே ஊடுருவ முயலும் தீவிரவாதிகளைத் தடுத்து பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்தல் உள்ளிட்ட பணிகளை, அதிநவீன ரோந்துக் கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் கடலோரக் காவல் பிரிவு மேற்கொண்டு வருகிறது. தற்போது மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்று விபத்தில் சிக்கிக்கொள்ளும் மீனவர்களைக் காப்பாற்றி உடனே கரைக்குக் கொண்டு வருவதற்காக `சில்லெக்ஸ் என்ற அதிநவீன ரோந்துக் கப்பலை தமிழகக் கடலோரக் காவல் பிரிவு வாங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக வாங்கப்பட்டிருக்கும் இந்தப் படகு நீரிலும், நிலத்திலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நியூசிலாந்து நாட்டின் தயாரிப்பான இந்தப் படகு சரியாக 6 மீட்டர் நிளத்தைக் கொண்டிருக்கிறது. இதன் அடியில் ஹைட்ராலிக் மூலம் இயங்கக்கூடிய 3 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. படகு கடலில் இறங்கியது இந்தச் சக்கரங்கள் உள்ளே இழுத்துக்கொள்ளும். கடலில் சுமார் 35 நாட்டிகல் செல்லும் இந்தப் படகு தரையில் 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும், கடலின் ஆழத்தைத் துல்லியமாக அளவெடுக்கும் எக்கோ சவுண்ட் சிஸ்டத்துடன் ஜி.பி.எஸ், ரேடார் போன்ற அதிநவீன வசதிகளைக் கொண்டிருக்கும் இந்தப் படகுகள் அமெரிக்க ராணுவத்தின் கடற்படையில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
1.50 கோடி மதிப்புள்ள இந்தப் படகின் தரம் மற்றும் செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்காகப் புதுச்சேரியில் தேங்காய்திட்டு துறைமுகத்தில் பரிசோதிக்கப்பட்டது. கடந்த 10 நாள்களாகத் தண்ணீரிலும், தரையிலும் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அனைத்து சோதனைகளிலும் வெற்றிபெற்றதை உறுதி செய்த அதிகாரிகள் நேற்று மாலை சென்னை கடலோரக் காவல் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்துப் பேசிய தமிழகக் கடலோர காவல் பிரிவின் அதிகாரிகள், “மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்று விபத்தில் சிக்கிக்கொள்ளும் மீனவர்கள் மற்றொரு படகின் மூலம் மீட்கப்படுவார்கள்.
அதன்பிறகு அவர்களை அருகில் இருக்கும் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். ஆனால், துறைமுகங்களை தேடுவதிலேயே கால விரயம் ஏற்படுவதோடு, மீட்கப்பட்ட மீனவரும் உயிரிழக்க நேரிடுகிறது. ஆனால், இந்த ‘சில்லெக்ஸ்’ படகின் மூலம் மீனவர் மீட்கப்பட்டதும் கடலில் இருந்தே கரையேறி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடலாம். இப்படியான மீட்புப் பணிகள் மட்டுமல்லாமல் பயங்கரவாதத் தடுப்புக்கும் இந்தப் படகு உதவியாக இருக்கும்” என்றனர்.