தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று ஜூன் 14-ஆம் தேதி தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்குச் சபாநாயகர் குறுக்கீடு செய்ததால் அதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 23-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து மறுதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் ஒவ்வொரு துறை வாரியான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அந்தத் துறைக்கான செலவினங்கள் மற்றும் நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலைச் சபையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற இருந்த காரணத்தால் சட்டசபை கூட்டம் தொடர்ந்து நடைபெறாமல் மார்ச் 24-ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையை மீண்டும் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுகுறித்து கடந்த ஜூன் 7-ஆம் தேதி தமிழக சபாநாயகர் தனபால் அறிக்கை வெளியிட்டார். அதில், ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவித்தார். வாரஇறுதி மற்றும் பொது விடுமுறை தினங்களைத் தவிர்த்து 24 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. மேலும், சமீபகாலமாக தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் ஆளும் அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஜூன் 14-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து, கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எம்.எல்.ஏ. செங்குட்டுவன், கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்றும், நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துப் பேசுகையில், கூட்டுறவு வேளாண் வங்கிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழகத்தில் உள்ள 4 லட்சத்து 65 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் பாதுகாப்பாகவே உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 677 கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. மேலும், 4 லட்சத்துக்கு 66 ஆயிரம் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார். அதைத்தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியபோது திமுக உறுப்பினர்கள், தெர்மாகோல், தெர்மாகோல் என்று கூச்சலிட்டனர். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
அதையடுத்து கேள்வி நேரத்தின் போது, திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, ரயில்வே மேம்பாலம் குறித்து கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். அதற்கு மத்திய அரசு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் தெரிவித்து கடிதம் அனுப்பியது. நிதி ஒதுக்கப்பட்டு 2 வருடங்களாகியும் இன்னும் ஏன் மேம்பாலம் கட்டவில்லை என்று கூறினார்.
ஸ்டாலின் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் வகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், வில்லிவாக்கம் ரயில்வே முதல் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று கூறினார். அதேபோல், இதுகுறித்து வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் தெரிவிக்கையில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மாநகராட்சி ஒப்புதல் பெற்ற பின்னர் விரைவில் தொடங்கப்படும். அதன் பின்னர், ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு விரைந்து பாலம் கட்டும் பணி நடைபெறும் என்றார்.
குரோம்பேட்டையில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படுமா என்று திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி கேள்வி எழுப்பியபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறுகையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறுவை, விபத்துப் பிரிவு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என்றார்.
அதையடுத்து, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டு, விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தபோது, சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, நீதிமன்றத்தில் உள்ள விவகாரங்களை இங்கு பேசவேண்டாம் என்றும் அவை மரபுகளை உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபை உறுப்பினர்கள் சட்டசபையின் மாண்பை கடைபிடிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் அறிவுறுத்தியும், தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமைதி காக்காமல் கூச்சலிட்டனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 5%, 12%, 18%, 28% என்ற நான்கு பிரிவுகளின் கீழ் வரிகள் விதிக்கப்பட உள்ளன. வரி விலக்கு உள்ள பொருள்களும் சில இருக்கின்றன. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கெடுத்து, தமிழக அரசு ஜி.எஸ்.டி.-யை விரைவில் தாக்கல் செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில், இன்று ஜி.எஸ்.டி. தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி இந்த மசோதாவைத் தாக்கல் செய்கிறார். மேலும், இந்த மசோதா, இன்றே நிறைவேற்றப்படும் எனத் தெரிய வருகிறது.