வங்கிகளைக் கண்காணிப்பின் கீழ் ரிசர்வ் வங்கி கொண்டுவருவது சரியான நடவடிக்கைதான்

0
1184

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எழுந்திருக்கும் மோதல் தொடர் செய்தியாகிவருகிறது. அரசியல் தளத்தில் இதை விவாதிப்பது என்பது வேறு; விதிகள் சார்ந்து, ரிசர்வ் வங்கியின் சுயாதிகாரம் என்பது என்ன, மத்திய அரசு எந்த அளவுக்கு இதில் தலையிடலாம், ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள மனத்தாங்கல் எப்படிப்பட்டது என்பதை நாம் பார்ப்போம்.

முதலாவது, அரசுடைமை வங்கிகளை ஒழுங்குபடுத்த தனக்கு மேலும் அதிகாரங்கள் தேவை என்று ரிசர்வ் வங்கி விரும்புகிறது. இரண்டாவது, வருடாந்திர லாப ஈவாக இவ்வளவு தொகை தரப்பட வேண்டும் என்று அரசு தனக்குக் கட்டளையிடக் கூடாது என்று நினைக்கிறது. மூன்றாவதாக, கடன் வழங்கலைக் கட்டுப்படுத்த ‘தனி நெறியாளர்’ தேவை என்று அரசு கூறிய பரிந்துரை அதற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரங்களில் யார் பக்கம் இருக்கிறது நியாயம்?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த மிகப் பெரிய மோசடியை ரிசர்வ் வங்கி சரியாகக் கண்காணிக்காமல் கோட்டைவிட்டுவிட்டது என்று அரசு குற்றம்சாட்டியது. அரசுடைமை வங்கிகளைக் கட்டுப்படுத்தத் தனக்கு அதிக அதிகாரம் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் படேல் கூறியிருந்தார். ஆனால், எல்லா அரசு வங்கிகளின் வாரியத்திலும் ரிசர்வ் வங்கியின் நேரடிப் பிரதிநிதியாக இயக்குநர் ஒருவர் இருக்கிறார்.

அரசுடைமை வங்கிகளை ரிசர்வ் வங்கி நேரடியாகத் தணிக்கை செய்கிறது. வங்கிகளின் நிதித் தணிக்கை அறிக்கைகளையும் ஆராய்கிறது. ஏதேனும் ஒரு வங்கி நலிவுற்றால், அதை வலுவாக இருக்கும் இன்னொரு வங்கியுடன் இணைத்துவிடுகிறது. சமீபத்திய உதாரணம், குளோபல் டிரஸ்ட் வங்கியை ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸுடன் இணைத்தது. அரசுடமை வங்கிகள் மீது ரிசர்வ் வங்கிக்குப் போதிய கட்டுப்பாட்டு அதிகாரங்கள் இருக்கின்றன. ஆனால், அவை முழுமையாகப் பயன்படுத்தப்படுவது கிடையாது என்பதே உண்மை.

ரொக்கத்தை வணிக வங்கிகளுக்குக் கடனாகத் தந்து, அந்த வட்டியிலிருந்து வருமானம் ஈட்டுகிறது ரிசர்வ் வங்கி. அத்துடன், அரசின் கடன் பத்திரங்களை விற்றும் வருவாய் ஈட்டுகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி ரிசர்வ் வங்கியுடையது. அது அச்சிடும் ரூபாய் நோட்டுகளின் மொத்த முகமதிப்பைக் கூட்டி, அதிலிருந்து அச்சுக்கூலி, கரன்சி விநியோகச் செலவு ஆகியவற்றைக் கழித்தால் கிடைக்கும் தொகை ‘உபரி’ வருமானமாகும்.

இந்த உபரி வருமானத்தில் ஒரு பகுதியைத் தனது அவசரத் தேவைகளுக்காகவும், சொத்து வளர்ச்சி செலவுக்காகவும் ரிசர்வ் வங்கி ஒதுக்கிக்கொள்கிறது. எஞ்சிய ‘உபரி’ அரசுக்கு வழங்கப்படுகிறது. 2016-ல் இந்தத் தொகை ரூ.65,876 கோடி. 2017-ல் இது ரூ.30,659 கோடியாகச் சுருங்கியது. 2018-ல் ரூ.50,000 கோடியை அரசுக்கு வழங்கியது ரிசர்வ் வங்கி.

அரசு கேட்கிறது என்பதற்காக ரிசர்வ் வங்கி இந்தத் தொகையை அதிகப்படுத்தினால் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு குறைந்து, அதன் வரவு-செலவுக் கணக்கைப் பலவீனப்படுத்திவிடும். அரசுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது ரிசர்வ் வங்கி. உலகெங்கிலும் ரிசர்வ் வங்கிகள் தங்களிடம் சேரும் உபரித்தொகையை அரசுக்கு மாற்றிவிடுகின்றன.

கடன் அளிப்பு உள்ளிட்ட நிதி வழங்கல்கள் பணக் கொள்கையின் கீழ் வருவன; கடன் அளிப்பைக் கண்காணிக்க மட்டும் ‘தனி நெறியாளர்’ என்பது தேவையற்றது. ஆனால், அரசு எரிச்சலடைகிறது.

ரிசர்வ் வங்கி பிப்ரவரி 12-ல் வெளியிட்ட சுற்றறிக்கைதான் அதற்கும் அரசுக்கும் பிணக்கை அதிகப்படுத்தியது. கடன் வாங்கியவர் அதைத் திரும்பச்செலுத்த முடியாவிட்டால் செய்யப்படும் பழைய ஏற்பாடுகள் அனைத்தும் நெறியாளரால் (ரிசர்வ் வங்கி) ரத்துசெய்யப்பட்டது. ‘ஒருவர் கடன் வாங்கி அதற்குண்டான தவணையைச் செலுத்தத் தவறினால், ஒரேயொரு நாள்தான் தாமதம் ஆனது என்றாலும் அதை வாராக் கடன் என்று அறிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சுற்றறிக்கை கண்டிப்புடன் கூறியது. கடன் வாங்கியவரை திவால் நீதிமன்றத்துக்கு அழைப்பாணை மூலம் வரவழைத்து, அவருடைய சொத்துகளை விற்று, கடனை வசூலிக்கும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றது.

அதிகக் கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க முடியாமல் திணறும் வங்கிகள் விஷயத்தில், உடனடித் திருத்த நடவடிக்கை மேற்கொண்டு கடன் வழங்க கட்டுப்பாடுகளை விதிக்கிறது ரிசர்வ் வங்கி. இது தொழில், வணிகத் துறைக்குக் கடன் கிடைப்பதைக் குறைத்து, நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சுகிறது அரசு. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு உதவுவதில் ரிசர்வ் வங்கி தனி கவனம் செலுத்த வேண்டும், குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அரசு விரும்புகிறது.

வாராக்கடன் விவகாரத்தில் வங்கியாளர்கள், தொழில்துறையினர், அரசு ஆகிய முத்தரப்பும் ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் கடுமையானவை என்று கருதுவதுடன், அதை அமல்படுத்தும் நேரம் (தொழில்துறைக்குப் பணம் அதிகம் தேவைப்படும் நேரம்) தொடர்பாகக் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

ஆனால், வலுவற்ற வங்கிகளைக் கண்காணிப்பின் கீழ் ரிசர்வ் வங்கி கொண்டுவருவது சரியான நடவடிக்கைதான்; இப்படிச் செய்வதன் மூலம் மீளாக்கடன் எண்ணிக்கையைக் குறைக்க முடிகிறது என்கிறது ரிசர்வ் வங்கி. இந்த நடவடிக்கையைத் தளர்த்த வேண்டும், தொழில், வர்த்தகத் துறைக்கு அரசு வங்கிகளிடமிருந்து கடன் கிடைப்பதில் உள்ள நெருக்கடி குறைய வேண்டும் என்று வலியுறுத்துகிறது அரசு.

அரசின் இந்த விருப்பத்தை ரிசர்வ் வங்கி ஏற்றுச் செயல்படுத்தியிருக்கலாம். வெளிச்சந்தையில் கடன் பத்திரங்களை விற்று நிதி திரட்டுவது அல்லாமல், சிறப்பு நடவடிக்கைகள் மூலமும் நிதி திரட்டி வழங்கியிருக்கலாம். கடன் கொடுப்பதற்கான நிபந்தனைகளைக் கடுமையாக்கியதால், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வீடுகட்டக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில் சிக்கலில் சிக்கியிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here