தற்போதைய சூழ்நிலையில் பலரிடத்திலும் மரம் வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் நட்ட கன்றுகள் அனைத்தும் வளர்வதில்லை. நீர் ஊற்றுவதில் இருந்து கால்நடைகளிடம் இருந்து அவற்றைக் காப்பாற்றுவது வரை பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. அதுவும் கோடையில் குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மரம் வளர்ப்புக்கு நீர் பெற முடியாத நிலை உள்ளது.தவறவிடாதீர்வெப்பச்சிறையில் இருந்து விடுவிக்குமா மழை?- பாளையில் 105 டிகிரி வெயில்இதுபோன்ற நிலையைத் தவிர்க்க தேனியில் தற்போது நீர் மேலாண்மை உபகரணம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மரக்கன்றுகளுக்கு ஒரே நேரத்தில் தண்ணீரை ஊற்றுவதை விட சொட்டு சொட்டாக செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 5, 2 லிட்டர் மினரல் வாட்டர் கேன்களின் அடிப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு தலைகீழாக கட்டப்பட்டு சிறிய டியூப் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நீர் செல்லும் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. துளித்துளியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இதன் மெல்லிய குழாய் செடியின் வேர் பகுதியில் பதித்து வைக்கப்படுகிறது. இதனால் நீர் நேரடியாக வேர் பகுதிக்கு தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. பொதுவாக நீரை கன்றுகளுக்கு ஊற்றும் போது மண் உறிஞ்சுதல், ஆவியாதல் போன்றவற்றின் மூலம் நீர் இழப்பு ஏற்படும். ஆனால், இம்முறையினால் நீர் விரயமின்றி வேர் பகுதிக்குச் சென்றடைகிறது. முன்மாதிரியாக இதுபோன்ற உபகரணங்கள் தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதையின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது.