கத்திப்பாரா மேம்பாலத்தை பூட்டுப் போட்டு பூட்டியதுபோல் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த இயக்குநர் கவுதமன் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நேரில் விளக்கம் அளிக்குமாறு இயக்குநர் கவுதமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கவுதமன், கிண்டி கத்திப்பாரா பாலத்தின் இரு பக்கத்தையும் இரும்பு சங்கிலியால் பிணைத்து பூட்டி கடந்த ஏப்ரல் 13-ம் தேதி போராட்டம் நடத்தினார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்குநர் கவுதமன் உட்பட 6 பேரை புனித தோமையார் மலை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கிண்டி கத்திபாராவில் நடத்தியது போன்று மீண்டும் ஒரு போராட்டம் நடத்த கவுதமன் திட்டமிட்டுள்ளதாக புனித தோமையார் மலை போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தங்களுக்கு கடந்த ஜூன் 18 மற்றும் 19-ம் தேதி புகார் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த இளைஞர்களை கவுதமன் தூண்டி வருவதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் 16-ம் தேதி காலை 11 மணிக்கு புனித தோமையார் மலை துணை ஆணையர் முன் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி இயக்குநர் கவுதமனுக்கு புனித தோமையார் மலை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.