விவசாயத்தை அழிக்கும் ஆபத்தான புதிய மசோதா

0
1239

நாடு முழுவதும் உள்ள அணைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் அணைகள் பாதுகாப்பு மசோதா 2018 கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. 2010 ம் ஆண்டில் ‘அணைகள் பாதுகாப்பு மசோதா’ ஒன்றை காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு மாநிலங்களின் ஆதரவு இல்லாததால் மசோதா காலாவதியானது. தற்போது அணைகள் பாதுகாப்பு மசோதா 2018க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா மூலம் அனைத்து அணைகளின் பராமரிப்பையும் மேற்கொள்வதன் மூலம் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அணைகள் பாதுகாப்பு மசோதா மூலம் மாநிலங்களின் உரிமை மற்றும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் அணைகளின் பாதுகாப்பை முறைப்படுத்துவது தொடர்பான எந்தவொரு சட்டமும், மாநில அரசுகளின் செயல்பாட்டையும், உரிமைகளையும் எந்த வகையிலும் பறித்துவிடக் கூடாது. அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின் 2வது பட்டியலில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தில் அமைந்துள்ள அணைகள் மற்றொரு மாநிலத்திற்கு சொந்தம் என்றால் அதை பராமரிக்கவும், பயன்படுத்தவும் உள்ள உரிமை பற்றிய நீண்டகால ஒப்பந்தங்கள் உச்சநீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இது பற்றிய அம்சம் இந்த மசோதாவில் இடம்பெறவில்லை. இதுதான் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். ஏனெனில் முல்லைப் பெரியாறு, பரம்பிகுளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம் ஆகிய நான்கு அணைகளும் கேரளாவில் அமைந்துள்ளன. ஆனால், இந்த அணைகள் தமிழகத்திற்கு சொந்தமானவை. புதிய மசோதா மூலம் இந்த அணைகள் பராமரிப்பில் மத்திய அரசு தலையிடுவது தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிப்பதாக அமையும். இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட போதே ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இப்போது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் தெரிவித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில், உரிய சரத்துகளை கொண்டு வந்து புதிய மசோதாவில் திருத்தங்களாக சேர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும். ஏற்கனவே காவிரியில் 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. பாலாறு பாலைவனமாகி விட்டதால் வடதமிழகம் வறண்டு போய் விட்டது. இப்போது தென் தமிழகத்தின் விவசாய பகுதிகளையும் அழிக்கும் ஆபத்தாக இந்த புதிய மசோதா வந்துள்ளது. சட்டப்பேரவை தீர்மானம் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து மத்திய அரசு தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவே கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here