காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களை வாலிபர் ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டார். கடந்த 14ம் தேதியன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதி வழியாக செல்லும் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் வாகன அணிவகுப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில், தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பபட்ட காரை ஓட்டிச் சென்று ராணுவ பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் ராணுவ பேருந்து வெடித்து 41 வீரர்கள் பலியாயினர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோபால் ஷகாரன் என்ற வாலிபர் வீரமரணமடைந்த 71 ராணுவ வீரர்களின் பெயர்களை பச்சை குத்தியுள்ளார். இதில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் உட்பட எல்லைப்பகுதிகளில் வீரமரணமடைந்த வீரர்களின் பெயர்களும் அடங்கும். ஷகாரன் ஏற்கனவே பகத் சிங் இளைஞரணியில் உறுப்பினராக உள்ளார்.
இது குறித்த அவர் கூறுகையில், ‘நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அவர்களின் பெயர்களை டாட்டூ குத்தியுள்ளேன். இது எனக்கும் மற்றவர்களுக்கும் தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக முன்மாதிரியாக இருக்கும்’. இவ்வாறு ஷகாரன் கூறினார்.