நாடு முழுவதும் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த சந்தைகள், மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் மூலம் அரசு விதிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் ஒவ்வொன்றாக பொதுமக்களின் செயல்பாட்டிற்காக திறக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி உள்ளிட்ட வாரச்சந்தைகள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில், நாட்றம்பள்ளி வாரச் சந்தை மட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்னமும் திறக்கப் படாமல் இருப்பதால் ஆடு மற்றும் கோழி வியாபாரிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்றம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாட்றம்பள்ளி வட்டாட்சியர் திருமதி சுமதியிடம், “நாட்றம்பள்ளி சந்தையை எப்போது திறப்பீர்கள்” என விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பிய போது வட்டாட்சியர் சுமதி கூறியதாவது;
“நாட்றம்பள்ளி சந்தையை திறப்பதில் அரசுக்கும் வட்ட நிர்வாகத்திற்கும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. எனக்கு எப்போதும் மக்களின் நலனே முக்கியம் அதனால்தான் இதுவரை சந்தையை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதியே சந்தையை திறக்க இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. என்பதை பொதுமக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
ஆனால் ஆடு மற்றும் கோழி வியாபாரிகள் கோரிக்கை என்னவென்றால், “மற்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை என்றாலும் பரவாயில்லை, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஆடு மற்றும் கோழிச் சந்தைகளுக்காவது அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும்” என்பதே வியாபாரிகள் மற்றும் தரகர்களின் கோரிக்கையாக உள்ளது. திருப்பத்தூர் ஆட்சியர் சம்பந்தப்பட்ட சந்தையை திறக்க இசைவு அளிப்பாரா? எதிர்பார்ப்பில் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.
-S.Mohan