ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் தனது உபயோகிப்பாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளதாக பேஸ்புக் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இணைய வழி சமூக வலைதளமாகும். உலக நாடுகள் முழுவதும் பல கோடி மக்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் உபயோகிப்பாளர்களின் தகவல்களை திருடி தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது வெளிவந்தது. இந்த நிறுவனம் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்களை திருடி இருப்பது சமீபத்தில் அம்பலமானது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில். பேஸ்புக் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இது, 60 நிறுவனங்களுடன் தனது இணையதளத்தை பயன்படுத்துவோரின் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கை இது தொடர்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டு உள்ளதாவது: பேஸ்புக் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிள், அமேசான், பிளாக்பெர்ரி, மைக்ரோசாப்ட் மற்றும் சாம்சங் உள்பட 60 நிறுவனங்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன்படி, பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள், அவர்களின் நண்பர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பிட்ட செல்போன் நிறுவன தயாரிப்பு போன்களில் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும்போது, பயனாளர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் குறித்த ரகசிய தகவல்களை பேஸ்புக் நிறுவனம் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
அதே நேரம், இந்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக்கின் சிறப்பு வசதிகளான செய்தி அனுப்புதல், லைக் பட்டன்ஸ், அட்ரஸ்புக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வந்தது. ரகசிய தகவல்களை வெளியாட்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என அறிவித்தபோதும், பயனாளர்களின் வெளிப்படையான ஒப்புதல் இன்றி அவர்களின் தகவல்களை அணுகுவதற்கு பேஸ்புக் அனுமதித்து வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, கடந்த 2011ம் ஆண்டு மத்திய வணிக ஆணையம் என்னும் அமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.