மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு

0
1257

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர்.

ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.

மனுதாரர் வாதிடுகையில், ‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை’ என கூறினார். மேலும், தூத்துக்குடி சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மக்களுடனே அரசு உள்ளது. மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாத கோரிக்கைகளை வைக்கிறார்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், அதன் அடிப்படையில் மீண்டும் ஆய்வு தேவையா என்பது பற்றி முடிவு செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here