ஊடகத்துறையை வேவு பார்த்த உளவாளிகள்

0
1386

கோப்ராபோஸ்ட் (cobrapost) என்கிற இணையதளம் நடத்திய புலனாய்வில், பல ஐடி நிறுவனங்கள், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களை, அரசியல்வாதிகளின் செல்வாக்கை போலியாக உயர்த்தவும், அவர்களுக்கு வேண்டாதவர்களை எதிர்க்கவும் பயன்படுத்துகின்றன என செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், பாஜக கட்சிக்கும் பல நிறுவனங்கள் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

செய்தி இணையதளமான ‘கோப்ராபோஸ்ட்’ (Cobrapost) நடத்திய ரகசியப் புலனாய்வு ஒன்றில், பணத்திற்காக ‘இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவான மெல்லிய செய்திகளை ‘ வெளியிட 17 இந்திய ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது. ‘ஆப்பரேஷன் 136’ (operation 136) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் புலனாய்வில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் சில காட்சிகளை அந்த செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அனிருத்தா பஹால் திங்களன்று டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

கடந்த 2017ஆம் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index 2017), இந்தியா 136-ஆவது இடம் பிடித்ததை தொடர்ந்து இந்த புலனாய்வுக்கு ‘ஆப்பரேஷன் 136 என்று பெயரிடப்பட்டது. இந்தப் புலனாய்வின்போது, கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் செய்தியாளர் ஒருவர், ‘ஸ்ரீமத் பகவத் கீதா பிரசார் சமிதி’ எனும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு, 17 நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக பிரிவினையை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டால், பெரும் தொகை வழங்கப்படும் என்றும் மூன்று மாத காலம் தொடர்ச்சியாக விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்றும் அந்த நிருபர் ஊடக நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார். ஏழு செய்தித் தொலைக்காட்சிகள், ஆறு செய்தித்தாள்கள், மூன்று செய்தி இணையதளங்கள் மற்றும் ஒரு செய்தி முகமை உள்ளிட்ட அந்த 17 ஊடகங்களிலும் மூத்த பொறுப்புகளில் உள்ளவர்கள் பணத்துக்காக இந்துத்துவத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட ஒப்புக்கொள்வது கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள காணொளியில் பதிவாகியுள்ளது.

வரும் 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு எதிராக மட்டுமல்லாது, ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் சர்ச்சைக்கு ஆளாகும் தலைவர்களான அருண் ஜேட்லி, மனோஜ் சின்ஹா, ஜெயந்த் சின்ஹா, வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோருக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டனர். குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தொலைக்காட்சிகளில் ஒன்றான இந்தியா டி.வியின் விற்பனைப் பிரிவுத் தலைவர் சுதிப்தோ சௌத்ரி, “ஆச்சார்ய சத்திரபால் அடல் எனும் அந்த நபர் செய்திகளுக்கு பணமளிப்பதாக கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எங்கள் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு விளம்பரத்தை வெளியிட ஒப்புக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக கூறுவதே அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவே கோப்ராபோஸ்ட் தேர்ந்துடுக்கப்பட்ட காணொளிகளை மட்டும் வெளியிட்டுள்ளது. இந்தியா டிவி சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பிபிசி அனுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்துள்ளார்.

அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள இந்தி நாளிதழான தைனிக் ஜக்ரானின் முதன்மை ஆசிரியர் சஞ்சய் குப்தா, “ஜார்கண்ட், பிகார் மற்றும் ஒடிஷா மாநில விற்பனை மேலாளர் சஞ்சய் பிரதாப் சிங் செய்தி வெளியிடுவது குறித்து உத்தரவாதம் அளிக்க அவருக்கு அதிகாரம் இல்லை. அந்தக் காணொளி உண்மை என்று கண்டறியப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளார்.

“நாமிருவரும் ஒரே அலைவரிசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று உத்திரவாதமளிக்கிறார் ஆதிமூலம். மறைவான கோணத்திலிருந்து அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிரில் அமர்ந்திருப்பவரிடம் ஆதிமூலம் தொடர்ந்து பேசுகிறார். தங்கள் குடும்பத்திற்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையேயான பாரம்பரிய உறவு குறித்துச் சொல்கிறார். பிரதமர் மோடி தமிழகம் வந்தால் தங்கள் குடும்பத்தை சந்திக்காமல் செல்லமாட்டார் என பெருமைப்பட்டுக் கொள்கிறார். தனது தந்தை மாதம் ஒருமுறையாவது தில்லி செல்வாரென்றும் பிரதமரைச் சந்திப்பார் என்றும் குறிப்பிடுகிறார்.

அந்தக் காணொலியில் பங்கேற்ற நபர்கள் சாதாரணமானவர்களாக இருந்திருந்தால் இரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலுக்கும் பெரிய மதிப்பு இருந்திருக்காது; நாலாந்தர அரசியல் புரோக்கர்களின் வழமையான அலட்டலாக கடந்து போயிருபோம். ஆனால், ஆதிமூலம் சாதாரணமானவரல்ல; அவர் ஜனநாயகத்தின் ‘நான்காம் தூணில்’ உள்ள செங்கற்களில் ஒருவர், ‘உண்மையின் உரைகல்லுக்குச்’ சொந்தக்காரர்களில் ஒருவர் – தினமலர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தினமலரை நிறுவிய ராமசுப்பையரின் பேரன், தற்போது அந்தப் பத்திரிகையின் வர்த்தகப் பிரிவின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். எனவே மேற்படிக் காணொளியும் அதில் வரும் உரையாடலும் நமது கவனத்திற்கு உரியதாகிறது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாகவும், சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும் செய்திகளை வெளியிடுவதாகவும் சமீப காலங்களில் இந்திய ஊடகங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here