பெட்ரோல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ள போதிலும் அவற்றின் மீதான கலால் வரியைக் குறைப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோல் விலை மீது லிட்டருக்கு 19 ரூபாய் 48 காசுகளும், டீசல் மீது 15 ரூபாய் 33 காசுகளும் கலால் வரியாக மத்திய அரசால் விதிக்கப்படுகிறது. இந்த வரியைக் குறைத்தால் பெட்ரோல் டீசல் விலையை வெகுவாகக் குறைக்க முடியும் என்பதால் மத்திய அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்து வந்தன.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தாலும், அரசுக்கு வருடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் நிதிப் பற்றாக்குறை மிகவும் அதிகரிக்கும்.
வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்துவது அதிகரித்தால் மட்டுமே வருமான இழப்பைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அப்போதுதான் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க முடியும், என்று அந்த அரசு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு ஏற்கெனவே 98 ஆயிரம் கோடிக்கு வருமான வரிச் சலுகையும், 86 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி குறைப்பும் வழங்கியுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தாலும் கூட பணவீக்கம் என்பது நாட்டில் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே வரி குறைப்பு அவசியம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவது உறுதியாகியுள்ளது.