தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுத்தவும் தடைவிதிக்கும் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், முதல்வர் பழனிசாமியின் பெயரை என்றும் நினைவுகூரத்தக்க வரலாற்று நடவடிக்கையாக இது இருக்கும். தொடக்கம் முதலாக, ‘இந்து தமிழ்’ நாளிதழ் வலியுறுத்திவரும் விஷயமும் இது.
பிளாஸ்டிக்கின் அடிப்படை பாலியெத்லீன் என்ற ரசாயனக் கலவையாகும். 1898-ல் வேறொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் வேதியியலாளர் ஹான்ஸ் வேதன் பெச்மனால் தற்செய லாக இது கண்டறியப்பட்டது. பாலியெத்லீன் கண்டுபிடிக்கப்பட்ட 100 ஆண்டுகளுக்குள்ளேயே பிளாஸ்டிக் பொருட்கள் உலகைத் தன்வயப்படுத்திவிட்டன. நாம் வாழும் காலத்தை பிளாஸ்டிக் யுகம் என்று அழைக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது.
விலை குறைவானது, நீண்ட நாள் உழைக்கக்கூடியது, நெகிழ்வுத் தன்மை கொண்டது என்று பாலியெத்லீன் பயன்பாட்டுக்கு ஆதரவாகப் பல காரணங்களைச் சொன்னாலும் ரசாயனப் பாதிப்புகளுக்கு உட்படாத அதன் தன்மை சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருக்கிறது. வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நீரிலோ நிலத்திலோ ஒருபோதும் மக்காது என்ற நிலையில், அது நிலத்தில் நடந்துகொண்டிருக்கும் உயிரோட்டமுள்ள மறுசுழற்சி இயக்கத்தைத் தடுத்து நிறுத்தி, நிலவளத்தையும் நீர்வளத்தையும் சீர்குலைக்கிறது. இந்நிலையில், ‘ஸ்ட்ரா’ (உறிஞ்சுகுழல்) உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60 நாடுகள் இறங்கியிருக்கின்றன. இந்தியா வில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், மக்களிடம் சரியான ஆதரவு இல்லாததால் அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதேசமயம், சிக்கிம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இவ்விஷயத்தில் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்று ஐநா பாராட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.
முதற்கட்டமாக பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள், தட்டுகள், கோப்பைகள், கொடிகள் மற்றும் வாட்டர் பாக்கெட்டுகள் ஆகியவை தடைசெய்யப்படும் எனவும் பால், எண்ணெய் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான பாக்கெட்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்றாக முன்வைக்கப்படும் சணல், துணிப்பைகளின் தயாரிப்பை அதிகரித்து, மலிவு விலையில் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெகிழிப் பொருட்களின் காலவரையற்ற தீங்கிலிருந்து நாளைய உலகைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அரசோடு மக்கள் சேர்ந்து நிற்க வேண்டிய தருணமிது!