தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்றத்தகவல்களை தொலைக்காட்சி, நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நடைமுறைக்கு வரும் என்று விளக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ”அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை தொலைக்காட்சி, நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறையாவது வெவ்வேறு தேதிகளில் மக்கள் அறியும் படி விளம்பரம் செய்வது கட்டாயமாகும்.
இதே தகவலை திருத்தப்பட்ட வேட்பாளர் படிவம்26-ல் வேட்பாளர்கள் குறிப்பிட வேண்டும்.தாங்கள் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும், எவ்வளவு கிரிமினல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். இதை அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளங்களில் பதிவிட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவைச் செயல்படுத்தாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது முடக்கப்படும். மேலும், தங்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் அளிக்கப்பட்டதற்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
இந்த உத்தரவு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வரும். தொலைக்காட்சி, நாளேடுகளில் விளம்பரம் செய்யும் செலவு என்பது வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின், தங்களின் குற்றப்பின்னணி குறித்து நாளேடுகள், தொலைக்காட்சிககளில் விளம்பரம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுக்கப்படும் விளம்பரங்களைப் பார்த்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவியாக இருக்கும் என்று உத்தரவிட்டிருந்தது. இதை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.