திருப்பத்தூர் மாவட்டம் நாறட்றம்பள்ளி அடுத்த குட்டூர் கிராமத்தில் சுமார் 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. பலமுறை சம்பந்தப்பட்ட கத்தாரி ஊராட்சி செயலர் ஜலபதி அவர்களிடம் பலமுறை முறையிட்டும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு குருபவாணிகுண்டா திருப்பத்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்துகளையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் 3 கிலோமீட்டர் வரை நடந்தே சென்றனர். இதனால் இச்சாலையில் 1 மணிநேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. பின்னர் வந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசி பேருந்துக்கு வழிவிட செய்தனர். தாமதமாக வந்த நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு பாலாஜி அவர்களை பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அடுத்த சில நாட்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதாக உறுதி அளித்ததையடுத்து, போராட்டக்காரர்கள் சமாதானம் அடைந்தனர். பெரும்பாலும் போராட்டக்காரர்கள் ஊராட்சி செயலர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர்.