தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு ஊராட்சி, பொட்டல்காடு கிராமத்தில் மக்கள் வாழும் குடியிருப்புகள், மக்களின் வாழ்வாதாரமான விளை நிலங்கள், பள்ளிக்கூடம் ஆகியவற்றின் ஊடாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கவும், எரிவாயு உந்து நிலையம் அமைக்கவுமான ஒரு நாசகர திட்டத்தை 2019 ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தத் தொடங்கியது.
IOCL நிறுவனத்தின் நாசகர திட்டத்தை கண்டித்தும், எரிவாயு குழாய் பதிப்பதை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வழியுறுத்தியும், எரிவாயு உந்து நிலையம் அமைப்பதை கைவிடக்கோரியும்
பொட்டல்காடு ஊர்த் தலைவர் செல்வசேகர் தலைமையில் ஊர் மக்கள் 2019 தொடக்கத்திலிருந்து ஓராண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும், IOCL நிறுவனமும் பொட்டல்காடு மக்களின் கோரிக்கையை புறக்கணித்ததோடு போராட்டத்தை சீர்குலைப்பதற்கு பல்வேறு வழிகளில் உள்ளடி வேலைகளை செய்தது.
பொட்டல்காடு ஊர் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்
முதல் காவல் துறை கண்காணிப்பாளர், தாசில்தார் என அதிகாரத்திலிருப்பவர்கள் அனைவரிடமும் நேரில் சென்று மனு கொடுத்துள்ளனர். வழக்கம் போல ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்கிற அதிகார வர்க்கத்தின் கண்துடைப்பு நாடகங்கள் அரங்கேற்றப்படுவதும், வாக்குறுதிகள் தரப்படுவதும் தொடர் கதையானது. மறுபக்கத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தன.
அதிகாரத்திலிருப்பவர்கள் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட மக்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக எரிவாயு குழாய் பதிக்கும், எரிவாயு உந்து நிலையம் அமைக்கும் பணித் தளத்திற்றே சென்று மறியல் போராட்டம் நடத்தினர். மக்கள் என்னதான் வடிவங்களை மாற்றிப் போராடினாலும்
அதிகாரத்திலிருப்பவர்கள் அவ்வளவு எளிதாக வளைந்து கொடுத்து விடுவார்களா என்ன..?
மாவட்ட நிர்வாகமும், நாசகர IOCL நிறுவனமும் பொட்டல்காடு ஊர் மக்ககளின் உறுதிமிக்க போராட்டத்தை உடைப்பதற்கு பல்வேறு உத்திகளை கையாளத் தொடங்கியது. முதலில் ஊர்த் தலைவர் செல்வசேகரிடம் பனம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பேரம் பேசினார்கள். அவர் ஒத்து வரவில்லை என்றதும் மறைமுகமாக பொட்டல் காடு ஊர் மக்களின் உறுதிமிக்க போராட்டத்தைப் பற்றி சாதியை முன்வைத்து தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அதுவும் கை கொடுக்கவில்லை.
கருப்பு ஆடுகளை களமிறக்கினார்கள் அதுவும் தோல்வியில் முடிந்தது.
அடுத்ததாக மிரட்டிப் பார்த்தனர். அடுத்ததாக போராட்டத்தில் முன்னணி வகித்த இளைஞர்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன ஆனாலும் பொட்டல்காடு ஊர்மக்கள் போராட்டத்தை கைவிடாமல் உறுதியோடு இருந்தனர்.
அதிகாரத்திலிருப்பவர் நிலமையை மேலும் மேலும் சிக்கலாக்குவதை உணர்ந்து கொண்ட பொட்டல் காடு ஊர் மக்கள் போராட்ட வடிவத்தை மாற்றினர். பல்வேறு சமூக அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும், சனநாயக சக்திகளையும் இணைத்து போராட்டத்தை பொதுத் தளத்தை நோக்கி விரிவுபடுத்தினார்கள்.
மக்கள் போராட்டம் வலிமையடைவதை அரிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்..? காவல்துறை துணையோடு மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தொடங்கினர். பொட்டல்காடு ஊர் மக்கள் 12.12.2029 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். அன்று இரவில் பொட்டல்காடு அருகில் ரகசியமாக லாரிகளில் ராட்சத குழாய்களை கொண்டு வந்து இறக்கி வைத்தனர்.
13.12.2019 அன்று குழாய் இறக்குவதை தடுத்தும், மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இறுதியில் குழாய் பதிப்பதை நிறுத்தி விடுவதாக வாக்குறுதி தரப்பட்டது. இறக்கி வைக்கப்பட்ட குழாய்களை எடுத்துச் செல்லாமல் இங்கிருந்து ஒரு அடிகூட நகரமாட்டோம் என்று மக்கள் உறுதிகாட்டியதும் குழாய்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
மக்கள் போராட்டம் வலிமையடையும் போதெல்லாம் வாக்குறுதி கொடுப்பதும், பின்பு அதனை மீறுவதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிக்கடி நடத்தும் திருவிளையாடல்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கில் நாடே முடங்கிக் கிடக்கும் சூழலை பயன்படுத்திக் கொண்டு IOCL நிறுவனம் மீண்டும் விளைநிலங்கள், வழியாக குழாய் பதிக்கத் தொடங்கியது. இதனைக் கண்டித்து 15.07.2020 அன்று பொட்டல்காடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர். 16.07.2020 அன்று உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்து சமூக, அரசியல் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
அவ்வளவுதான் அதிகாரத்தில் இருப்பவர்கள் கூடிப் பேசி உள்ளிருப்பு போராட்டத்தில் சமூக, அரசியல் அமைப்புகள் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் இரவோடு இரவாக காவல்துறை புதுக்கோட்டை , உப்பாத்து ஓடை, கூட்டம்புளி விலக்கு, குலையன் கரிசல் பாண்டியாபுரம் விலக்கு,
அத்திமரப்பட்டி விலக்கு, பொட்டல் காடு, சாண்டி கால்லூரி, மதிகெட்டான் ஓடை, ஆறுமுகநேரி என பொட்டல் காடு கிராமத்திற்குள் எந்த திசையிலிருந்தும் வந்து சேர முடியாதபடி பத்துக்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து கட்டுக்காவலையும் பலப்படுத்தி பொட்டல் காடு கிராமம் முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
பொட்டல்காடு ஊர் மக்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கு பெறுவது மட்டுமல்ல அதனை வெற்றி பெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை – நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்கிற செயல் திட்டத்தின் அடிப்படையில் கலந்தாலோசிக்கப்பட்டு செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதனடிப்படையில்
சமூக ஊடகத்தில் கருத்துப் பரப்பலைத் தொடங்கியது.
உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவாக
உயிர்வாழும் உரிமையை பறிக்காதே நாசகர IOCL நிறுவனமே வெளியேறு
என்கிற தலைப்பில் துண்டறிக்கையோடு காவல்துறையின் கட்டுக்காவலையும் கண்காணிப்பு வளையத்தையும் கடந்து சரியாக 9.45 மணிக்கு போராட்டக்களத்தைச் சென்றடைந்தோம்.
சந்தன மாரியம்மன் கோவில் திடலில் ஊர்த் தலைவர் செல்வசேகர் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள் எழுச்சியோடும், போர்க்குணத்தோடும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளிலிருந்து உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக வாகனங்களில் வந்தவர்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர். முள்ளக்காடு பஞ்சாயத்து தலைவர் கோபிநாத் கூட தடுத்து நிறுத்தப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர்
குவிக்கப்பட்டிருந்தனர். பொட்டல் காடு ஊருக்குள் எங்கு பார்த்தாலும் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் தான் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களை விட காவல்துறையினர்தான் அதிகம்
சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித்சிங் கலோன் தலைமையில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பொட்டல்காடு மக்களுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லுங்கள் என்றனர். அதற்கு மக்கள் நாங்கள் ஏற்கனவே கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் இந்த முறை கலெக்டர் இங்கு வந்து மக்களை வந்து வேண்டும். என்பதை முடிந்த முடிவாக சொல்லி விட்டனர்.
அடுத்ததாக உளவுத்துறையினர் கிராம மக்களிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி போராட்டம் நடத்தினால் வழக்கு போட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமான அரசு ஊழியர்கள் இருக்கும் கிராமம் இது. போராட்டத்தினால் அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு..? இந்த காலத்தில் அரசு வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று உள்ளிருப்பு போராட்டத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கி மக்களை போராட்டத்திற்கு எதிராக திசைதிருப்பும் நோக்கில் பேசினார்கள். பலனளிக்கவில்லை மக்கள் உளவுத் துறையினரின் வஞ்சக சூழ்ச்சியை புரிந்து கொண்டனர்
மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் எடுத்த முதல் கட்ட முயற்சிகள் பலனளிக்காமல் போகவே அடுத்த கட்டமாக கருப்பு ஆடுகள் களம் இறக்கப்பட்டன. கருப்பு ஆடுகளின் உள்ளடி வேலைகளும் பலனளிக்காமல் போனது. உடனடியாக திண்டுக்கல்லில் இருந்து டி.எஸ்.பி பிரகாஷ் வரவழைக்கப்பட்டார். அவரும் எவ்வளவோ பேசி பார்த்தார் மக்கள் அசைந்து கொடுக்கவில்லை.
வேறு வழியில்லாமல் மாலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சியர் மக்களை சந்திக்க வருவதாகவும், ஊருக்கு வெளியிலுள்ள அம்மன் கோவில் முன்னால் வந்து சந்திப்பதாக தகவல் சொல்லப்பட்டது. மக்கள் கலெக்டர் தங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்றனர். சார் ஆட்சியர் காவல்துறை உயரதிகாரிகள் மக்களிடம் மீண்டும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதனடிப்படையில்
ஒரு வழியாக மாலை 6 மணியளவில் ஊருக்கு வெளியே அம்மன் கோவில் முன்பு கலெக்டர் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டார்.மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
பேச்சு வார்த்தைக்கு செல்பவர்கள் திரும்பி வரும் வரை உள்ளிருப்பு போராட்டம் நீடிக்கும் என்று மக்கள் முடிவெடுத்தனர் பொட்டல்காடு ஊர்த்தலைவர் செல்வசேகர், மள்ளர் பேராயம் தலைவர் சுபாசினி மள்ளத்தி, பொன்ராஜ் CPM, வழக்கறிஞர் செந்தில்,
தமிழர் விருதலைக் களம் காளிராஜ், நாம் தமிழர் மகளிரணி பொறுப்பாளர், கவுன்சிலர் அஸ்கர் ஆகியோரடங்கிய குழுவினருடன்
7.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில்
- எரிவாயு குழாய் பதிக்கும் பணிஉடனடியாக நிறுத்தப்படும்.
- மாற்றுப்பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
- இதற்கான ஏற்பாடுகள் ஒரு வார காலத்விற்குள் செய்யப்படும்
என்கிற வாக்குறுதி தரப்பட்டதன் அடிப்படையில் இரவு 9 மணியளவில் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.
பிரச்சனைகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் தீர்வுகளை நோக்கி முன்கர்ந்திருக்கும்
பொட்டல்காடு ஊர் மக்களின் உள்ளிருப்பு போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
இந்த உள்ளிருப்பு போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுவதற்கு சமூக அமைப்புகளைத் தவிர பல்வேறு தமிழர் குடிகள், தமிழர் அமைப்புகள், தமிழர் தேசியர்கள்,சனநாயக சக்திகள் போராட்டத்தை ஆதரித்து சமூக ஊடகத்தில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டல்காடு ஊர் மக்களின் ஓராண்டு காலத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிற அறவழிப் போராட்டத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இதுவரை பங்கெடுக்கவில்லை இனியும் பங்கெடுக்கப் போவதுமில்லை.
பொட்டல்காடு சுடுகாடாக மாறினாலும அரசியல்வாதிகளுக்கு,எந்தவிதமான இழப்போ, மன உறுத்தலோ எற்படப் போவதில்லை
முக்கியமான கட்டத்திற்கு முன்னேறி இருக்கும் பொட்டல் காடு மக்களின் உறுதிமிக்க போராட்டத்தை அரசு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– Priyadharsan.M