உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் துறையின் தன்னாட்சி அமைப்பான பூச்சி மருந்து முன்வரைவு தொழில்நுட்ப நிறுவனம் ஐபிஎப்டி, மேற்பரப்பு தளத்தின் மீது தெளிப்பதற்கான தொற்றுநீக்கி தெளிப்பான், காய்கறிகள், பழங்களுக்கான தொற்றுநீக்கி கரைசல் ஆகிய இரண்டு புதிய தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
ஐபிஎப்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கதவு கைப்பிடிகள், நாற்காலிகளின் கைவைக்கும் தளங்கள், கணினி விசைப்பலகை, மவுஸ் அட்டைகள் போன்ற மேற்பரப்புகளில் நுண்ணுயிரிகள் பரவி, நேரடியாகவோ, மறைமுகத் தொடர்பு மூலமோ தனி நபர்களுக்கு பரவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஐபிஎப்டி, ஆல்கஹால் அடிப்படையிலான தொற்றுநீக்கி தெளிப்பானை மேற்பரப்புகளில் தெளிப்பதற்காக உருவாக்கியுள்ளது. இது, நுண்ணுயிரிகள், பாக்டீரியா, தொற்றுகள் மூலம் பரவும் பல்வேறு நோய்களைத் தடுக்கக்கூடியதாகும். இந்த தெளிப்பி விரைவில் ஆவியாகக்கூடியது என்பதால், மேற்பரப்புகள் மீது கறைகளையோ, படலங்களையோ, மணத்தையோ ஏற்படுத்தாது எனக் கூறப்பட்டுள்ளது.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் மீது படிந்துள்ள பூச்சி மருந்து நச்சுப் படிவங்களை அகற்றக்கூடிய தொற்றுநீக்கி கரைசலையும் ஐபிஎப்டி உருவாக்கியுள்ளது. தினசரி ஊட்டச்சத்துக்கு பழங்களும், காய்கறிகளும் மிகவும் தேவையான, அடிப்படையான உணவுப்பொருட்களாகும். சிலசமயங்களில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்துவதால் அவை பச்சைக் காய்கறிகள், பழங்களில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடக்கூடும். அவற்றின் மேற்பரப்பில் படிந்திருக்கும் நச்சுக்கள், அவற்றை உட்கொள்ளும்போது, சுகாதாரக்கேடுகளை விளைவிக்கக்கூடும்.
பழங்கள், காய்கறிகளை 100 சதவீதம் மக்கள் நுகர்வுக்கு ஏற்றதாக மாற்ற, ஐபிஎப்டி தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட கலவை முறையை உருவாக்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாசுகளை அகற்றுவது மிகவும் எளிதாகும். நீர் சேர்க்கப்பட்ட இந்தக் கரைசல் திரவத்தில் காய்கறிகள், பழங்களை முக்கி 15-20 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் சுத்தமான தெளிந்த நீரில் அவற்றைக் கழுவ வேண்டும். இந்த எளிமையான வழிமுறை, பழங்கள் மற்றும் காய்கறிகளில் படிந்திருக்கும் நச்சுப் படிவங்களை முற்றிலுமாக அகற்றி விடக்கூடியதாகும்.
-PIB